Designed by Iniyas LTD
மனந்தளரோம் என கைவண்ணத்தை காட்டிய மழலைகள்.


தமிழர்தாயகம் வன்னி பெருநிலப்பரப்பு மீதான சிறீலங்கா அரச படைகளின் நில ஆக்கிரமிப்பு போருக்குப்பின்னரும், அதன் பின்னரான சிங்களப் படை மயப்பட்டுக்கிடக்கும் முற்றுகைச்சூழலிலும் சிறுவர்களை உளவளப்படுத்தல் அல்லது மனவளப்படுத்தல் என்பது மிகப்பெரிய விடையமாக இருக்கிறது.
திருமதி வசந்தன் நித்திலாதேவியின் வளப்படுத்தலில் முள்ளியவளை கணுக்கேணி கிழக்கு கலைவாணி முன்பள்ளி மழலைகளின் மனவளக்கலையை மேம்படுத்தும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது
தொடக்கப்பள்ளி வாழ்க்கை எனும் போது, சுறுசுறுப்பு, தன்னியல்பு, நம்பிக்கை, ஆரம்பிக்கும் ஆற்றல் போன்ற மிக முக்கியமான உணர்வுத்தொகுதிகளைக்கொண்ட வளர் இளம் பள்ளிப்பராயத்தினரது ஆளுமை அடையாளத்தை விருத்தி செய்து “இல்லை-இயலாது-முடியாது” என்பதைத்தவிர்த்து “ஆம்-முடியும்-முயற்சிப்போம்” என்று அவர்களை முன் உந்த வைப்பது மிகவும் சவாலான பணியே!
கவனிப்பு,அக்கறை, பக்குவத்தோடு, விரிந்தெழுகின்ற அவர்களின் தேடல்களுக்கு வடிகால் வெட்டிக்கொடுப்பதுடன், கெட்டவைகள் சூழ்ந்துள்ள சூழலில் நல்லவை காண்பிக்கும் சூழலை தோற்றுவிப்பதிலும், சோம்பிக்கிடக்கும் பொழுதுகளில் நம்பிக்கை வித்துகளை அவர்களுக்குள் விதைப்பதிலும் முன்பள்ளி ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது.
தட்டித்தட்டி பானை செய்வது போலவும், தொட்டுத்தொட்டு சாமி செய்வது போலவும் மகிழ்ச்சிகரமான, பாதுகாப்பான ஒரு கற்றல் சூழலை மழலைகளுக்கு ஏற்படுத்திக்கொடுக்க வன்னி பெருநிலப்பரப்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் குறைந்தளவு வேதனத்துடன் கடுமையாக உழைக்கிறார்கள்.
முள்ளியவளை கணுக்கேணி கிழக்கு கற்பக விநாயகர் அறநெறிப்பாடசாலை (கலைவாணி முன்பள்ளி) மழலைகளின் மனவளக்கலையை அவர்களின் கைவண்ணத்திலான பொருட்களின் மூலம் கண்டிறியக்கூடியதாய் இருக்கின்றது.
முழுக்க முழுக்க கழிவுப்பொருள்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படைப்புகள், குறித்த மழலைகளின் கற்பனை சக்தியை,படைக்கும் திறனை முழம் போட்டு காட்டி நிற்கின்றன.