தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மனித உரிமை ஆணையத்தில் மீண்டும் கண்டன தீர்மானத்தை எதிர்கொள்ளும் இலங்கை அரசு

விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே, 2009ல், இறுதி கட்ட சண்டை நடந்தது. இதில், அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டனர். போர் ஓய்ந்த பிறகும், இலங்கையில், மனித உரிமை மீறல்கள் நடப்பதாக, ஐ.நா., புகார் தெரிவித்திருந்தது.  கடந்த,  நவம்பரில் நடந்த, காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வந்த, பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன், “மனித உரிமை மீறல் குறித்து,  இலங்கை அரசு, தன்னிச்சையான விசாரணை நடத்த வேண்டும்’ என, அறிவுறுத்தியிருந்தார்.சிறீலங்கா அரசு

ஜெனிவாவில் உள்ள, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா, இரண்டு முறை தீர்மானம் கொண்டு வந்தது. மூன்றாவது முறை, தங்கள் நாட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதை தவிர்க்க, போரின் போது காணாமல் போனவர்கள் குறித்து, இலங்கை அரசு தற்போது, கணக்கெடுப்பு பணியை துவக்கியுள்ளது.

இதற்கிடையே, இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஆராயவும், போர் நடந்த பகுதிகளை பார்வையிடவும், அமெரிக்காவில் உள்ள, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி, ஸ்டீபன் ராப், ஒரு வார பயணமாக, கொழும்பு வந்தார். இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிசையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களையும், ஸ்டீபன் சந்தித்து பேசினார். வடக்கு மாகாணத்துக்கு சென்று, போர் பாதித்த பகுதிகளை படம் பிடித்தார். போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து, அவர்களது கருத்துக்களை பதிவு செய்து கொண்டார்.

ஸ்டீபனின் இந்த செயலுக்கு, சிங்கள அமைப்பினர் எதிர்பபு தெரிவித்து, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன், போராட்டம் நடத்தினர்.ஸ்டீபன் பதிவு செய்துள்ள அறிக்கையின் அடிப்படையில், இலங்கை அரசு உரிய நடவடக்கை எடுக்கும்படி, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதனால், வரும் மார்ச் மாதம், ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், மீண்டும் ஒரு கண்டன தீர்மானத்தை, இலங்கை அரசு எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

Comments
Loading...