தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மன்னிப்பு கோரிய அரவிந்கேஜ்ரிவால்

தில்லியில் நடந்த ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி ஒருவர் தூக்கிலிட்டு இறந்த பிறகும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தியதற்காக அக்கட்சியின் தலைவரும் தில்லி முதலமைச்சருமான அரவிந்த் கேஜ்ரிவால் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இருந்தபோதும், ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் விவசாயிகளின் உண்மையான நிலை குறித்து விவாதிப்பதற்குப் பதிலாக, விவகாரத்தை திசைதிருப்புவதாக அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

தான் ஒரு மணி நேரம் பேசவிருந்ததாகவும் ஆனால், 10-15 நிமிடத்திலேயே பேசி முடித்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால், தான் பேசியிருக்கவே கூடாது என்றும் அது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால், தான் மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

“அந்தப் பேரணியை ரத்துசெய்திருக்க வேண்டும். ஆனால், இதில் அரசியல் செய்வதைவிட்டுவிட்டு, விவசாயிகளின் உண்மையான நிலைமை மீது கவனம் செலுத்துங்கள். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், விவசாயிகள் ஏன் தற்கொலை செய்கிறார்கள் என்பது குறித்துத்தான் விவாதிக்க வேண்டும்” என செய்திச் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.hejrivaal

காவல்துறை அழைத்தால், இது தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவும் தான் தயாராக இருப்பதாகவும் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழையன்று இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியது. அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இதுதொடர்பாகப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பேரணியில் கூடியிருந்த கூட்டம் கஜேந்திர சிங் தற்கொலை செய்துகொள்வதற்காக மரத்தில் ஏறியபோது, கைதட்டி ஆரவாரம் செய்தாகக் கூறினார்.

இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்றுவருகின்றன.

Comments
Loading...