தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மலையக தொழிலாளர்கள் நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம்!

ஆறு தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் நேற்று(7) ஈடுபட்டனர்.    நுவரெலியா மாவட்டத்தில் அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தின் பிரிவுகளான உட்லெக், பச்சபங்களா, நல்லதண்ணி, சின்னதோட்டம், பிறேமோர் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.    தோட்டத் தொழிற்சாலைக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கையில்,   “தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு பறிக்கும் கொழுந்து கிலோவில் இருந்து அதிகப்படியான கிலோகிராம் கழிக்கப்படுகின்றது. ஒரு நேர நிறுவையின்போது, 5 தொடக்கம் 7 கிலோகிராம் கழிக்கப்படுகின்றது.    “தோட்டத் தொழிலாளர்கள், பறிக்கும் கொழுந்தினை நிறுவை அளவீடு செய்யும் தராசு முறையற்ற நிலையில் உள்ளது.

தேயிலை தொழிற்சாலையில் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கவில்லை.    “குறிப்பாக, மலசலகூட வசதி, குடிநீர் வசதி, இரவு நேரத்தில் தங்கி தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதி என்பன செய்து கொடுக்கவில்லை.   “அத்தோடு, தோட்டத்தில் உள்ள அம்பியூலன்ஸ் வண்டி பல வருடகாலமாக திருத்தப்படாமையால் வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை ஏற்றிச்செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றனர்.

  இந்தப் போராட்டம் தொடர்பில் மலையக மக்கள் முன்ணனி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், தோட்ட நிர்வாகத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து, தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு செய்யவேண்டிய விடயங்களை உடனடியாக செய்துகொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

Comments
Loading...