Designed by Iniyas LTD
மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு
மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாறன் சகோதர்கள் உள்ளிட்டோர் நேற்று திங்கள்கிழமை டில்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜாகினார்கள். அப்போது மாறன் சகோதரர்கள் தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையை ஏற்றுக்கொண்ட டில்லி சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஒ.பி.சாய்னி, அதை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது மூத்த சகோதரரான சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், மலேசியன் மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த கிருஷ்ணன், அதே மேக்சிஸ் குழுமத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாக அதிகாரி ரால்ப் மார்ஷல் மற்றும் சன் டைரக்ட் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு சம்மன் இன்றைய தினமான திங்கள்கிழமை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக கூறி உத்தரவிடப்பட்டிருந்தது.
மலேசியன் மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் அக்குழுமத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாக அதிகாரி ரால்ப் மார்ஷல் ஆகிய இவ்விருவரும் மட்டும் இன்று நேரில் ஆஜராகவில்லை.
அவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதால், அவர்களிடம் நேரில் ஆஜராக கூறும் சம்மனை வழங்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவர்களுக்கு விரைவில் இந்த சம்மனை வழங்க முயற்சிக்க வேண்டும் என்று நீதிபதி ஒ.பி.சாய்னி கூறினார்.
ஏர்செல் நிறுவன பங்குகளை, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு வலுக்கட்டாயமாக விற்க வைத்த விவகாரத்தில் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.
குறிப்பாக இந்த முறைகேடுகள் காரணமாக சன் குழும நிறுவனம் ஆதாயம் அடைந்துள்ளதாகவும் குற்றம் பதியப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தான் இவர்கள் அனைவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராக கூறி உத்தரவு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த குறிப்பிட்ட வழக்கை, 2ஜி விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் இணைக்கப்பட்டுள்ளது தவறு என்று கூறி மாறன் சகோதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இந்திய உச்சநீதிமன்றம் முன்னதாக தள்ளுபடி செய்தது.
அதைப்போல் நேரில் ஆஜராக கூறுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் தள்ளுபடி ஆகியுள்ளதால், இவர்கள் கட்டாயமாக நேரில் ஆஜராக வேண்டிய சூழல் உருவாகியது.