Designed by Iniyas LTD
தமிழகத்தில் இருந்து நாடு திரும்பிய வவுனியா மக்கள் ஆர்ப்பாட்டம்
தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து சென்று தாயகம் திரும்பிய பின்னர், சொந்த இடங்களில் காணிகள் இல்லாத காரணத்தினால் வவுனியாவிலேயே குடியேற்றப்பட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு நிரந்த வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் எனக்கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை திங்களன்று நடத்தியிருக்கின்றார்கள். வவுனியா சிதம்பரபுரம் கற்குளத்தில் மூன்று கிராமங்களைச் சேர்ந்தவர்களே இந்த போராட்டத்தை நடத்தியிருக்கின்றார்கள்.
தாயகம் திரும்பிய இந்தக் குடும்பங்கள், சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பின்னர், கடந்த 2007 ஆம் ஆண்டு கற்குளம் பகுதியில் காணிகள் வழங்கி தற்காலிக வீடுகளில் குடியேற்றப்பட்டார்கள்.
நிரந்தர வீடுகள் வழங்கப்படும் என்று தங்களுக்கு அளிக்கப்பட்ட உறுதி மொழி நிறைவேற்றப்படாத காரணத்தினாலேயே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஒரு வருடத்திற்குத் தாக்குப் பிடிக்கத்தக்க வகையிலான தற்காலிக வீடுகளில் குடியிருக்க முடியாத நிலையில் தாங்கள் கஷ்டமடைந்திருப்பதாகவும், மழை பெய்யுமானால் பொது மண்டபத்திலேயே, தாங்கள் சென்று தங்க வேண்டியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் பிரதேசத்திற்கு பேரூந்து சேவைகள் நடைபெறுகின்ற போதிலும் தங்களுடைய கிராமங்களுக்கு சரியான வீதிகள் இல்லாத காரணத்தினால் அவற்றைப் பயன்படுத்த முடியாதிருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டிருந்தவர்களின் சார்பில் பிரதிநிதிகள் சிலர் வவுனியா அரசாங்க அதிபரைச் சந்தித்து மகஜர் ஒன்றைக் கையளித்து கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என கோரியிருக்கின்றனர்.