Designed by Iniyas LTD
மின் உற்பத்தியில் ஒரே நாளில் சாதனை
மின் உற்பத்தி நேற்று ஒரே நாளில் 15,191 மெகாவாட்டாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இதனால், மின்தடை அபாயம் நீங்கியுள்ளது.
தமிழகத்திற்கு தேவையான மின்சாரம், அனல் மின் நிலையம், புனல் மின் நிலையம், காற்றாலை மின்சாரம், டீசல் மூலம் மின்சாரம் என பல்வேறு வகையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, அனல் மின் நிலையங்கள் மூலமே அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால், மின் தேவையும் அதிகரித்துள்ளது.
அதாவது, வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் அதிக அளவு ஏ.சி. பயன்படுத்தப்படுவதால், கூடுதலாக 15 முதல் 20 சதவீதம் அளவுக்கு மின்சாரம் தேவைப்படுகிறது. தற்போதைய நிலையில், தினமும் 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், போதிய அளவில் மின் உற்பத்தி இல்லாததால், மின்வெட்டு ஏற்படும் நிலை இருந்தது. கோடை வெயில் தொடர்ந்து சுட்டெரிப்பதால், மின் தேவை மேலும் அதிகமாகி, மின்வெட்டும் அதிகமாகும் அபாயம் இருந்தது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 191 மெகாவாட் மின் உற்பத்தியை செய்து சாதனை படைத்துள்ளது.
அதாவது, தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால், மின் தடை ஏற்படும் அபாயம் நீங்கியுள்ளது. தொடர்ந்து, மின்சார உற்பத்தியை அதிகரிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.