தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ராஜீவ் கொலைக்கைதிகள் விடுதலை ரத்து என்று வெளியான செய்தி வதந்தி – மத்திய உள்துறை அமைச்சகம்

ராஜீவ் காந்தி கொலைக்கைதிகளை விடுவிப்பதற்காக தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்ததாக வெளியான செய்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளது.central-government

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். அந்த வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், சுப்ரீம் கோர்ட்டு அதை ஆயுள் தண்டனையாக மாற்றியது.  அதையடுத்து, அவர்களையும், ஏற்கனவே இவ்வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மேலும் 4 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதை எதிர்த்து, மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.

அம்மனுவை விசாரித்த அரசியல் சட்ட பெஞ்ச், ராஜீவ் கொலைக்கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பு அளித்தது.  இதற்கிடையே, கடந்த மாதம் 2-ந் தேதி, தமிழக அரசின் தலைமை செயலாளர் ஞானதேசிகன், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதினார்.  அதில், ராஜீவ் கொலைக்கைதிகளின் வேண்டுகோளை ஏற்று அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதுபற்றிய மத்திய அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் ஞானதேசிகன் கூறி இருந்தார்.

ஆனால், ராஜீவ் கொலைக்கைதிகளை விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் நேற்று செய்தி வெளியானது.  அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் பொறுப்பில் உள்ள உயரதிகாரி ஒருவர் டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-  செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் வெளிவந்தது போல, ராஜீவ் கொலைக்கைதிகள் விடுதலை தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. மத்திய சட்ட அமைச்சகத்துடன் இது தொடர்பாக ஆலோசனை அளவில்தான் விவகாரம் உள்ளது.

மத்திய சட்ட அமைச்சகம் தங்களது ஆலோசனையை வழங்கிய பிறகு உள்துறை அமைச்சகம் இதுபற்றிய முடிவை எடுக்கும். தற்போது ராஜீவ் கொலைக்கைதிகள் விடுதலை குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. விரைவில் விசாரணையும் நடைபெற உள்ளது. தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இதுகுறித்த முடிவை அறிவிப்பதில் மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, கோர்ட்டில் முடிவை தெரிவிக்க மத்திய அரசு மேலும் அவகாசம் கோரும்.  இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Comments
Loading...