Designed by Iniyas LTD
மீண்டும் ஒரு யுத்தத்தை தவிர்ப்பதே எனது குறிக்கோள்!
தேசிய சுதந்திரப் போராட்டத்தில் நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் செயற்பட்டு தமது யுகப்பணியை நிறைவேற்றியதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதேபோன்று இப்போதும் நாட்டை அபிவிருத்தி அடையச்செய்து, நாட்டை கட்டியெழுப்பும் காலத்தின் தேவையை நிறைவேற்றுவதற்கு அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைய வேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
முஸ்லிம் சமய விவகார, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்குரிய புதிய பண்பாட்டு மையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களனைவரும் ஒன்றிணைந்தே தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, மீண்டும் போர் ஏற்படுவதனைத் தவிர்த்து அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்புவது தனது தலைமையிலான தற்போதய அரசாங்கத்தின் பொறுப்பெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர் சக்திகள் இது தொடர்பில் தொடர்ச்சியாக தவறான அர்த்தங்களை வெளிப்படுத்தி இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்த அவர், இந்த பிற்போக்குவாத சக்திகளுக்கு இடமளிக்காமல், நாட்டில் தேசிய ஒற்றுமையை பாதுகாப்பதற்கு அனைத்து மத தலைவர்களும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
கொழும்பு டீ.பீ.ஜயா மாவத்தையில் அமைந்துள்ள பண்பாட்டு மையத்தின் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்துவைத்த ஜனாதிபதி அந்த மையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தையும் ஆரம்பித்து வைத்தார்.
தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் அவர்களால் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்டது.
பௌத்த மதகுருமார் உள்ளிட்ட மதகுருமார்கள், அமைச்சர்களான றிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளர் டீ.பீ.எம்.வீ.ஹப்புஆராச்சி உள்ளிட்ட அலுவலர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.