Designed by Iniyas LTD
மீண்டும் மூன்று மாவட்டங்களில் விசாரணை நாடகம்!
ஸ்ரீலங்கா அரசின் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு எனும் நாடகக்குழு இம்மாத இறுதியில் மேலும் மூன்று மாவட்டங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அந்த ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ.குணதாஸ குறிப்பிட்டுள்ளார். இதன்படி மார்ச் 25 முதல் 30 ம் திகதி வரை குறித்த மாவட்டங்களில் பெறப்பட்ட முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை இம்மாத இறுதிக்குள் விசாரணை செய்து முடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் குணதாஸ சுட்டிக்காட்டியுள்ளார். கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு முடிந்ததும், எதிர்வரும் ஜூன் மாதமளவில் ஜனாதிபதியிடம் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
இத்தனை வருடங்களாக இந்த விசாரணை எனும் அரச நாடகத்தில் இதுவரை இராணுவத்தின் மீது எந்த முறைப்பாடும் குற்றமும் சுமத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகை ஏமாற்றும் ஒரு கபட நாடகம் தான் இந்த விசாரணை குழு என்பதை எம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.