தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மீனாகுமாரி – வைகோ

மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மீனாகுமாரி பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:vaiko

தேசிய மீனவர் பேரவை சார்பில் ஏப்ரல் 22-ஆம் தேதி தில்லி நாடாளுமன்றம் நோக்கி, 13 கடலோர மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் பேரணியாகச் செல்ல உள்ளனர்.

மீனவர் நலனுக்கு எதிரான மீனாகுமாரி குழு பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். பன்னாட்டுப் பெரு நிறுவனங்களுக்கு ஆழ்கடலில் மீன் பிடிப்புக்கான புதிய உரிமங்கள் வழங்கக் கூடாது. இந்திய பாரம்பரிய மீனவ சமூகத்துக்கு ஆழ்கடல் மீன்பிடி உரிமம் வழங்குவதன் மூலம் மீனவர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பேரணி நடைபெறுகிறது.

இந்திய கடல் வளத்தை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கான வாசலை மோடி அரசு திறந்துவிட்டுள்ளது.

மீனவர்கள் 12 கடல் மைல் தொலைவுக்கு உள்ளேயே மீன் பிடிக்க வேண்டும். ஆழ்கடல் பகுதி வரை பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்கள் மீன் பிடிக்கலாம் என்ற மீனாகுமாரி குழு பரிந்துரைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக் கூடியதாகும்.

எனவே, மீனாகுமாரி குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Comments
Loading...