Designed by Iniyas LTD
முதல்–அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்பது தொடர்பாக கூட்டம்
முதல்–அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கான பணிகள் நேற்று தொடங்கின. தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். ஜெயலலிதா பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளும் நேற்று தொடங்கின. சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளரை, உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, செய்தித்துறை செயலாளர் மூ.ராசாராம், டி.ஜி.பி. அசோக்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் சில அதிகாரிகள் சந்தித்து இதுகுறித்து ஆலோசனை நடத்தினர்.
22–ந்தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்த பிறகு, முதல்–அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 22–ந் தேதி பிற்பகலில் கவர்னர் மாளிகையில் முதல்–அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்கிறார். உடன் 32 அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர். அங்கு இந்த நிகழ்ச்சி எளிமையாக நடத்தப்படுகிறது. முக்கிய விருந்தினர்கள் சிலர் மட்டும் கலந்து கொள்கின்றனர். அதற்கான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்துக்கு ஜெயலலிதா வருகிறார். அங்கு தயாராக உள்ள தனது அறையில் அவர் அலுவலகப் பணிகளை தொடங்குவார்.
பெண்களுக்கு நலமளிக்கும் வகையில் சில புதிய திட்டங்களுக்கான கோப்புகளில் அவர் கையெழுத்திடுகிறார். முக்கிய நபர்களை அவர் சந்தித்து வாழ்த்துகளைப் பெறுவார். அதன் பிறகு அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்துக்கு ஜெயலலிதா செல்கிறார். அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அவர் மாலை அணிவிப்பார். முதல்–அமைச்சராக ஜெயலலிதா நீடிக்காமல் போன சோகத்தாலும், அவர் மீண்டும் முதல்–அமைச்சராக வர வேண்டும் என்ற எண்ணத்திலும் தற்கொலை செய்துகொண்ட பலரது குடும்பத்தினருக்கு உதவிகளை ஜெயலலிதா வழங்குகிறார் என்று அவர் தெரிவித்தார்.