Designed by Iniyas LTD
மும்மொழிப் பாடத்திட்டம் மூலம் சமஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சி: வைகோ குற்றச்சாட்டு
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழிப் பாடத் திட்டம் மூலம் சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
2018 ஆம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு, பொதுத் தேர்வாக மாற்றப்படும் என்று அறிவித்துள்ள சூழலில், மும்மொழி பாடத்திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை நீட்டிப்பதால் மாணவர்களுக்கு மேலும் சுமை அதிகரிக்கும்.
மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தைக் கற்பிக்க மத்திய அரசு முனையவில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி இருக்கிறார்.
ஆனால், பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட உத்தரவிட்டதும், சமஸ்கிருதத்தைத் திணிக்க
மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளும், அந்நிய மொழியென ஜெர்மன் பயிற்றுவிக்கப்படுவதை தடை செய்ய முயன்றதும் அரசின் நோக்கத்தை வெளிப்படுத்தின. சமஸ்கிருத மொழி, இந்தி மொழியை திணிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவது கண்டனத்திற்குரியது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் மும்மொழிப் பாடத்திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை புகுத்தி, சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்க மத்திய அரசு முனையக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.