Designed by Iniyas LTD
முல்லைத்தீவில் சாதிக்கும் சந்ததியின் ஏழாம் கட்டம்
40 மாணவர்களை உள்ளடக்கிய சாதிக்கும் சந்ததியின் ஏழாம் கட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 24-01-2015 அன்று நடைபெற்றுள்ளது.
புலம்பெயர் தமிழர் ஐவரின் பங்களிப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் முல்லை. கரைதுறைப்பற்று புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச்சேர்ந்த 40 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு புத்தகப்பை தைத்தபடி சீருடை மற்றும் 10 குறிப்பு நூல்கள் என்பன வழங்கப்பட்டிருந்தன.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
கடந்த 24-01-2015 அன்று காலை 9 மணியளவில் சாதிக்கும் சந்ததி செயற்திட்டத்தின் ஏழாம் கட்டமானது முல்லைத்தீவு கள்ளப்பாடு பொதுநோக்கு மண்டபத்தில் 40 மாணவர்களை உள்ளடக்கியபடி நடைபெற்றிருந்தது.
வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா இரவிகரனின் முன்னெடுப்பில் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் இச்செயற்திட்டத்தில் ஏற்கனவே அதன் ஆறு கட்டங்களின் ஊடாக 312 மாணவர்கள் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் இச்செயற்திட்டம் 352 மாணவர்களை உள்வாங்கியிருக்கிறது.
இது தொடர்பில் கருத்துரைத்த வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன்,
பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்த மாணவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் வறுமை நிலையோடு கல்வியை தொடர வழியின்றி பாதியிலேயே பாடசாலை இடைவிலகலை எதிர்கொள்ளும் நிலையை தவிர்க்கும் நோக்கிலேயே இச்செயற்திட்டம் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
சாதிக்கும் சந்ததியின் ஏழாம் கட்டத்திற்கான பங்களிப்பினை பிரான்சு, கனடா மற்றும் இலண்டனில் வாழும் ஐந்து ஈழத்தமிழர் வழங்கியுள்ளனர். பிரான்சில் வசிக்கும் கிருஸ்ணபிள்ளை இரவீந்திரன் அவர்கள் மூலமாக 20 மாணவர்களும் கனடாவில் வசிக்கும் யோகரட்ணம் ஜெகதீஸ் மற்றும் யோகரட்ணம் ஜெயகாந்த் மூலமாக 11 மாணவர்களும் இலண்டனில் வசிக்கும் சுந்தரவதன் மகாலிங்கம் அவர்கள் மூலமாக 5 மாணவர்களும் பிரான்சில் வசிக்கும் ஸ்ரனிஸ்லாஸ் யோகன் அவர்கள் மூலமாக 4 மாணவர்களுமாக மொத்தம் ஐந்து புலம்பெயர் தமிழர்கள், 40 ஈழத்தமிழ் மாணவர்களின் பாடசாலை இடைவிலகலை தவிர்க்கவும் அவர்களை ஊக்கப்படுத்தவும் முன்வந்திருக்கின்றனர்.
இச்செயற்திட்டம் இன்னும் பல கட்டங்களின் ஊடாக வறுமையில் கல்வியை தொடர கடினப்படும் பாடசாலைச்சிறார்களை அரவணைக்கும். கல்விக்கான ஒத்துழைப்பில் ஈழத்தமிழ் மாணவர்களையும் புலம்பெயர் தமிழ் உறவுகளையும் இணைக்கும் வகையில் இச்செயற்திட்டம் தொடர்ந்தும் பயணிக்கும்.
களமும் புலமும் ஒருசேரஇயங்கி இழந்துவிட்ட ஈழத்தமிழ் அடையாளங்களை மீட்டெடுக்க முன்னிற்போம் என்றார்.