Designed by Iniyas LTD
மூத்த ஜப்பானிய தமிழறிஞர் நொபுரு கரஷிமா மரணம் : வாழ்வுரிமைக் கட்சி இரங்கல்
மூத்த ஜப்பானிய தமிழறிஞரும் வரலாற்று ஆசிரியருமான நொபுரு கரஷிமா மரணத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மறைந்த பேராசிரியர் பெருந்தகையாளர் நொபுரு கரஷிமா அவர்களுக்கு செம்மார்ந்த இறுதி வணக்கம்!
மிக மூத்த தமிழறிஞரும் தென்னாசியா வரலாற்று ஆய்வாளருமாகிய ஜப்பானிய பேராசிரியர் நொபுரு கரஷிமா 82 வயதில் காலமானார் என்ற செய்தி பெரும் வருத்தத்தையும் துயரத்தையும் தருகிறது.
அரை நூற்றாண்டுகாலமாக தமிழ் மொழியைப் பற்றியும் தமிழகத்தையும் பற்றியுமான ஆய்வுகளில் ஈடுபட்டுவந்தவர் நொபுரு கரஷிமா. உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை புதுப்பித்து அதன் தலைவராக 1989ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை திகழ்ந்தவர்.
1995ஆம் ஆண்டு தஞ்சாவூரில் நடைபெற்ற 8- வது உலகத் தமிழ்நாட்டின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய பெருமகனார் நொபுரு கரஷிமா. கல்வெட்டுகளில் இருந்து தகவல்களைத் திரட்டுவதற்கு புள்ளியியல் முறையை பயன்படுத்தியவர்.
தமிழகத்து சமூக உறவுகள், நில உரிமைகள் தொடர்பான ஆய்வுகளை வெளிக்கொண்டு வந்தவர் நொபுரு கரஷிமா அவர்கள்.
இத்தகைய பெருமைக்குரிய பேராசிரிய பெருந்தகைக்கு இந்திய மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீவிருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. தன் வாழ்நாளின் கடைசிக் காலம் வரை ஜப்பானின் டோக்கியோ பல்கலைக் கழகத்தில் சிறப்பு பேராசிரியர், டாய்ஷோ பல்கலைக் கழகத்தின் இந்தியவியல் துறை சிறப்பு பேராசிரியர் என பணியாற்றி வந்தார்.
டோக்கியோவில் உடல்நலக் குறைவால் பெருமைமிகு தமிழறிஞரான நொபுரு கரஷிமா காலமானார் என்ற செய்தி வேதனையையும் துயரத்தையும் தருகிறது. பேராசிரியர் நொபுரு கரஷிமாவின் மறைவு தமிழ் ஆய்வுலகுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் பேரிழப்பாகும்.
ஜப்பானிய தமிழறிஞர் பேராசிரியர் நொபுரு கரஷிமா அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி செம்மார்ந்த இறுதி வணக்கத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் ஆய்வறிஞர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.