Designed by Iniyas LTD
மூன்றாம் கட்ட மீனவர்கள் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றுள்ளது
சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு – இலங்கை மீனவப் பிரதிநிதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்திருப்பதாக இருதரப்புப் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர். தமிழகத் தரப்புக் கோரிக்கைகள் குறித்து மே மாதத்தில் முடிவு தெரிவிக்கப்படுமென இலங்கைத் தரப்பு மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா – இலங்கைக்கு இடையில் பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிக்கும் ராமேஸ்வரம், நாகப்பட்டிணம் பகுதி மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அடிக்கடி கைதுசெய்யப்படும் சம்பவங்கள் நடந்துவருகின்றன.
இது தொடர்பாக இருதரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளைச் சுமத்திவந்த நிலையில், இந்த விவகாரத்தை சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பு மீனவ பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
முதற்கட்டமாக, கடந்த ஆண்டு ஜனவரியில் சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதற்குப் பிறகு, இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை கொழும்பு நகரில் நடைபெற்றது.
இதில் முடிவுகள் ஏதும் எட்டப்படாத நிலையில், மூன்றாவது கட்டப் பேச்சுவார்த்தை இன்று மீண்டும் சென்னையில் நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்கள் தரப்பில் 13 பேரும் புதுச்சேரி மீனவர்கள் சார்பில் 3 பேரும் இலங்கை சார்பில் 10 பேரும் கலந்துகொண்டனர். தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயபால் கலந்துகொண்டார்.
இது தவிர, மத்திய அரசின் சார்பில் சில அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, தமிழக தரப்பின் சார்பில் 7 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக தமிழகத்தின் சார்பில் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அருளானந்தம் தெரிவித்தார்.
தவிர, தடைசெய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தப்போவதில்லை என தமிழக மீனவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் அருளானந்தம் தெரிவித்தார்.
வருடத்தில் 83 நாட்கள் இலங்கைப் பகுதியில் மீன் பிடிப்பதற்கு ஒப்புக்கொள்ளும்படி இலங்கை மீனவர்களிடம் கேட்டதாகவும் அருளானந்தம் தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் அளித்த கோரிக்கைகள் குறித்து, ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் நடக்கவிருக்கும் மீனவர்கள் மாநாட்டில் முடிவுசெய்து, மே மாதத்தில் முடிவைத் தெரிவிப்போம் என இலங்கையின் சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் பணிப்பாளர் சதாசிவதம் தெரிவித்தார்.
மேலும், தமிழக மீனவர்கள்கள் கைதுசெய்யப்படும்போது, கச்சத் தீவு அருகே மீன் பிடித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிப்பது வருத்தமளிப்பதாகவும் அவர்கள் எங்கே, எப்படி கைதுசெய்யப்பட்டார்கள் என்பதை சரியாக அறித்து செய்தி வெளியிட வேண்டுமெனவும் சதாசிவம் கூறினார்.