Designed by Iniyas LTD
மேலிடம் உத்தரவு தந்தால் தேர்தலில் போட்டியிடுவேன் – தமிழிசை
பா.ஜனதா கட்சியின் மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம், தியாகராய நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்ட மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:- தேசிய தலைவர் அமித்ஷா, தமிழகம் வருகிறார். இது அவருடைய தனிப்பட்ட பயணம். கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் உள்பட யாரையும் அவர் சந்திக்கவில்லை. ஏனென்றால், கடந்த 2 தினங்களுக்கு முன்பு தான் டெல்லியில் நடந்த செயற்குழு கூட்டத்தில், தமிழக தேர்தல் நிலவரம் குறித்து அமித்ஷா எங்களுடன் விவாதித்து இருக்கிறார். அப்போது அவர், ‘‘தமிழக தேர்தலை யாரும் சாதாரணமாக எண்ண வேண்டாம். களத்தில் தீவிரமாக பணியாற்ற வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.
அ.தி.மு.க.-தி.மு.க.விற்கு மாற்றாக தமிழகத்தில் மாற்று அணி உருவாக வேண்டும் என்பதற்காக தான் கடந்த 2014-ம் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. உள்பட பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்தித்தோம். அதே நிலையில், வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க முடிவு செய்தோம். ஆனால் கூட்டணி ஏற்படுவதற்காக அவர்களிடம் (விஜயகாந்த்) இருந்து சில நிபந்தனைகள், எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் எங்களை பொறுத்தவரை கூட்டணிக்காக, மக்கள் நலனில் சமரசம் செய்துகொள்ளமாட்டோம். எனவே தான் நிபந்தனைகளுக்கு கட்டுப்படாமல், துணிச்சலோடு, சுயநலம் இல்லாமல் எங்களோடு வரும் கட்சிகளோடு இணைந்து 234 தொகுதிகளிலும் தனித்து மட்டுமல்ல, தனித்துவத்தோடு போட்டியிடுவோம்.
ஏனென்றால் அவர்களை (விஜயகாந்த்) போல் நாங்கள் முதல்-அமைச்சர் பதவிக்கு கூட ஆசைப்படவில்லை. தேர்தலில் வெற்றிபெற்ற பிறகுதான் முதல்-அமைச்சர் யார் என்று அறிவிக்க வேண்டும் என்று எண்ணிணோம். விஜயகாந்தை முதல்- அமைச்சர் வேட்பாளராக எங்கள் கட்சி தலைவர்கள் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தனித்து நின்றால் வெற்றி பெற முடியாது என்பது பா.ம.க.விற்கு கூட தெரியாதா என்ன? இருந்தாலும், அவர்கள் 8 மாதத்திற்கு முன்பே அன்புமணியை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்து விட்டு, எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் என்றார்கள். ஆனால் இதுவரை ஒருவர் கூட அவர்கள் கூட்டணிக்கு செல்லவில்லை.
2 திராவிட கட்சிகளுக்கு எதிரான வாக்குகள் சிதறி விடக்கூடாது என்பதற்காக தான் கூட்டணி அமைக்க முயற்சித்தோம். அதற்காக எங்களை பலவீனமானவர்கள் என்று எண்ணி விடக்கூடாது. ஊழலற்ற, வளர்ச்சியான ஆட்சி என்ற கோஷத்தை மக்களிடம் பா.ஜனதா மட்டுமே சொல்ல தகுதியானது. எனவே மக்களை சந்தித்து ஆதரவு பெறுவோம். அதேபோல் விஜயகாந்த் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி என்று தே.மு.தி.க. தெளிவாக அறிவித்து இருக்கிறது. ஆனால் கருணாநிதி, ‘‘தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது’’ என்று கூறுகிறார்.
அப்படியானால், நான் கேட்பது விஜயகாந்த் தலைமையை ஏற்று, அவர்களுடன் தி.மு.க. கூட்டணி வைக்க போகிறதா?. என்பது தான். கட்சி மேலிடம் உத்தரவிட்டால், தமிழக சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடுவேன். மாநில தலைவர் என்ற முறையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்குசேகரிப்பேன். என அவர் கூறினார்.