தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மே 18 – சிறப்புக்கவிதை

மே 18
=====

மறக்க முடியுமா மனிதனாக…
மறந்தால் இருக்க முடியுமா தமிழனாக…!

மாண்ட தமிழர்களையும்,
மறைந்த உறவுகளையும்
மறந்து போவானா…
மறந்து போனவன்
தமிழன் ஆவானா…?

இன வெறியால் கொன்ற தினத்தை
கொலைகாரக் கூட்டம்
கொண்டாடி மகிழ்ந்த நாள்…!
தமிழர் மனம் உருகி,
மேனி கருகி,
நடை பிணமாக
நகர்ந்த நாள்…!

குடும்பமாக வந்தவர்களையும்
கூட்டமாகக் கொன்று
குவித்ததைச் செய்தியிலும்
இணைய தளத்திலும்
பார்த்து படித்துத் துடித்துக் கூக்குரலிட்ட நாள்…!

குழி வெட்டிப் புதைபதற்குக்கூட
குடும்பத்தில் ஓர் உயிர் இல்லாமல்
குடும்பத்தோடு சிதைந்து
போன நாள்…!
நடப்பதற்குத் திடமில்லாமல்
கடப்பது சடலமென்று அறிந்தும்,
உயிரைப் பிடித்துக்கொண்டு
ஓடிய நாள்…!

பிணந்தின்னிக் கழுகினம்
சரண் புகுந்த உறவுகளின்
சதை நெரித்து
உயிர் குடித்த
கோர நாள்…!

ஐ.நா. துணை வரும்
என்றும்
அமெரிக்க ஆதரவு தரும்
எனவும் நம்பி
நாம் ஏமார்ந்து
போன நாள்…!

வெள்ளைக்கொடி கொண்டு
வேதனை சுமந்து போன எம்மவர்களை…
சுட்டுப் போட்டு
வெற்றி என்று எதிரிகள் கொக்கரித்துக்
கொண்டாடிய நாள்…!

சின்னஞ்சிறு பாலகர்களை
சித்திரவதைச் செய்து
முளங்காலில் நிக்க வைத்து
பிடரியில் சுட்டு
பேடிகள் பெருமை கொண்ட நாள்…!

புனர்வாழ்வு என்ற பெயரில்
உயிரோடு கைது செய்து உயிர் போகும் வரை
சித்திரவதைச் செய்து
சீரழித்த நாள்…!

அகதி என்று
எம் இனத்துக்கு
பெயர் சூட்டி
முட்கம்பிகளுக்குள்
முடங்கிக் கிடந்தே அடங்கிப்
போன அவல நாள்…!

இறக்கும் நிலையிலும் எமது சகோதரிகளையும் இழுத்துச்
சென்று இச்சை தீர்த்தபின் கொன்ற கொடிய நாள்…!

நிறைமாதக் கர்ப்பிணியாகாமல்
குறை மாதமாகவே
குழல் பீரங்கிகள்
பிரசவம் பார்த்து
துடிக்கத் துடிக்க
கொன்ற நாள்…!

மூச்சிழந்த தாயின் மார்பில்
முகம் புதைத்து
பால் குடித்த
குழந்தை முகம் பார்த்து
மூச்சடைத்து
நிர்க்கதியாய்
நாம் நின்ற நாள்…!

மறக்க முடியுமா மனிதனாக… மறந்தால் இருக்க முடியுமா தமிழனாக…!

ஏழு ஜென்மம்
பிறந்தாலும்…
ஒன்பது ஆண்டுகள் கடந்தாலும்
மறக்க முடியுமா மனிதனாக…
மறந்தால் இருக்க முடியுமா தமிழனாக…!
-ச.சூட்டி(யாழ்)

Comments
Loading...