Designed by Iniyas LTD
மோடி ஆட்சியில் மக்களின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படவில்லை – அத்வானி
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் குடிமக்களின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படவில்லை என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்தார். தில்லியில் குடியரசு தினக் கொண்டாட்டத்தையொட்டி, ராஜபாதையில் நடைபெற்ற நிகழ்வில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, நிகழ்வு முடிந்ததும் பிருத்விராஜ் சாலையில் உள்ள தனது இல்லத் தோட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி, தேசிய மூவர்ணக் கொடியை அத்வானி ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அத்வானியின் குடும்பத்தினர், மத்திய இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, பாஜக மூத்த உறுப்பினர் நஜ்மா ஹெப்துல்லா, அத்வானிக்கு பாதுகாப்பு அளித்து வரும் தேசியப் பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் காவல் படையினர், பாஜக தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் அத்வானி கூறியதாவது: இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்பட்டு விட்டதாக அண்மைக் காலமாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதில் உண்மையில்லை. அந்தக் கருத்தை வெளியிடுவோரை எனக்கு அடையாளம் காட்டினால் அவர்களின் நோக்கம் என்ன என்பதை என்னால் தெரிவிக்க இயலும். குடிமக்களிடையே தேசப்பற்றை வளர்ப்பதே நமக்குள்ள முக்கியக் கவலை. அனைத்துத் துறைகளிலும் தேசப்பற்றை வளர்க்க வேண்டும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கருத்து சுதந்திரத்துக்கு கட்டுப்பாடுகள் இருந்தன. அதை எதிர்த்து நாங்கள் போராடினோம். சுதந்திரம் அடைந்த பிறகு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, கருத்துச் சுதந்திரத்துக்கு தடை இருந்தது.
அதை எதிர்த்து மீண்டும் நாங்கள் போராடினோம். ஆனால், தற்போது அத்தகைய நிலைமை இல்லை என்றார் அத்வானி. பாஜக தேசியத் தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்வு செய்யப்பட்டதில் அத்வானிக்கு உடன்பாடு இல்லை என அந்தக் கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அத்வானியை அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். இது பற்றி அத்வானியிடம் கேட்டதற்கு, “கட்சித் தலைவராக பொறுப்பேற்றதும், வாழ்த்துப் பெற மட்டும் அமித் ஷா வந்தார்’ என்றார். பாஜக தலைமையகத்தில் குடியரசு தினம்: குடியரசு தினத்தையொட்டி தில்லி அசோகா சாலையில் உள்ள பாஜக தலைமையகத்தில் தேசிய மூவர்ணக் கொடியை அமித் ஷா ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல, குடியரசு தின விழா நடைபெறவுள்ள ராஜபாதைக்கு செல்லும் முன்பு அக்பர் சாலையில் உள்ள தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
சோனியா காந்தி வாழ்த்து: ராஜ்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “குடியரசின் அடிப்படை நோக்கத்தின்படி நாட்டின் இறையாண்மை, சமவுரிமை, நீதி ஆகியவை தழைத்து நீடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். மாச்சரியங்களைக் கடந்து இந்தியாவை தங்கள் இதயத்தில் நிறுத்தி வாழும் சிந்தனையுள்ள அனைத்து இந்தியர்களுக்கும் ஆதரவாக காங்கிரஸ் இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.