Designed by Iniyas LTD
யானைகளின் அட்டகாசத்தால் வீடுகள் பயிர்கள் நாசம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலக பிரதேசங்களுக்குட்பட்ட பகுதிகளில், காட்டு யானைகளின் தாக்குதல்கள் காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் விவசாயப் பயிர்களும் அழிக்கப்பட்டுள்ளன.நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பன்சேனையில் ஒரு வீடும் நல்லதண்ணி ஓடையில் ஒரு வீடும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை, விளாவடிவட்டையில் ஒரு வீடும் சேதமடைந்துள்ளது.
தொடர்புடைய பதிவு
நல்லதண்ணி ஓடையில் உள்ள வீட்டினை உடைத்து அங்கு சிறுபோக செய்கைக்காக வைத்திருந்த விதை நெல்லை காட்டு யானை உட்கொண்டு விட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் பயிர் நிலங்கள் மற்றும் வீட்டுத்தோட்டங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
பன்சேனையில் வீடு ஒன்றை யானை உடைத்தபோது அந்த வீட்டில் தங்கியிருந்த வயோதிப பெண்கள் இருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்னம், பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டுள்ளார். காட்டு யானைகளின் நடமாட்டம் இப்பகுதியில் உள்ளதாக பல அதிகாரிகளிடம் தெரிவித்த போதும், தமக்கு இதுவரை எவ்வித தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.