தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் தற்கொலை அங்கி விவகாரம் இன்ரப்போலை நாடியுள்ள ஸ்ரீ போலிஸ்!

interpolயாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேசத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரத்தில் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் புலம்பெயர் தமிழர் இருவரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை ஸ்ரீலங்கா பொலிஸார் நாடியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் ஜேர்மன் நாட்டில் வாழ்ந்து வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய கைது செய்வதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

தற்கொலை அங்கி மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதில் ஒருவரை ஸ்ரீலங்கா பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் வெள்ளை வானில் கடத்தி கைது செய்திருந்தமை குறித்து சந்தேக நபரது உறவினர்கள் சார்பில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திலும், கொழும்பிலுள்ள அதன் தலைமையகத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் யாழ்.குடாநாட்டில் தீவிர புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் நிலையில் எதிர்காலத்தில் மேலும் பலர் கைது செய்யப்படும் நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த நிலையில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட விடயத்தில் தொடர்புவைத்திருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகின்ற ஜேர்மனில் வாழும் புலம்பெயர் தமிழர் இருவரை கைது செய்வதற்கான நகர்வுகளை ஸ்ரீலங்கா பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...