தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் மல்லாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் இளைஞர் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் பொரிஸாரது துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து அப் பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வந்ததுடன் மக்கள் நீதி கேட்டு வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து அப் பகுதி எங்கும் விஷேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மல்லாகம் தேவாலயத்திற்கு அண்மையில் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 28 வயதான இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலுமொருவர் காயமடைந்திருந்தார்.

மேற்படி சம்பவத்தில், தாம் விசாரணை ஒன்றிற்காக சென்றுவிட்டு திரும்பி கொண்டிருக்கும் போது தம்மீது  குழுவொன்று தாக்குதல் நடத்த முற்பட்டதாகவும் இதனையடுத்தே தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் யாழில் இளைஞன் மீது துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்யுமாறு மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸார் துப்பாக்கி சூட்டில் இளைஞன் கொல்லப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், நேரில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொது மக்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி, துப்பாக்கி சூடு நடத்திய சுன்னாகம் பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...