தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

‘யுத்தத்தில் அட்டூழியங்களை செய்த குற்றவாளிக்கு மன்னிப்பு’-ஐநா விமர்சனம்

ஐந்து வயது குழந்தை உள்ளிட்ட எட்டு தமிழர்களைக் கொலை செய் குற்றச்சாட்டில், மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியை விடுதலை செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீர்மானம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையும் கடுமையாக விமர்சித்துள்ளது.


இந்த தீர்மானம் “பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானம்” என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செய்தித் தொடர்பாளர் ரூபர்ட் கொல்வில் தெரிவித்துள்ளார்.


“போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் பிற கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு, சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு அமைய, அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவது தொடர்பிலான, இலங்கையின் இயலாமைக்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


“பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுபோன்ற குற்றச்செயல்களுக்கு நீதியை பெற்றுக்கொள்ள உரிமை உண்டு. நீதி மற்றும் இழப்பீடு வழங்குவதற்கான சமமான மற்றும் நியாயமான அனுகுமுறை அவசியம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


இலங்கையில் இடம்பெற்ற மோதலில் ‘அட்டூழியங்களில்” ஈடுபட்டு, தண்டனை வழங்கப்பட்ட ஒரேயொரு குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குவது, மனித உரிமைகள் விடயத்தில், நாடு மேற்கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தை மேலும் குறைத்து மதிப்பிடுவதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செய்தித் தொடர்பாளர் ரூபர்ட் கொல்வில் மேலும் தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலை சம்பவத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவச் சிப்பாய் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸினால் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...