தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலகம் தற்காலிகமாய் உயிர்ப்போடு இல்லை , தடங்கலுக்கு மனம் வருந்துகின்றோம்…”

“உலகம் தற்காலிகமாய் உயிர்ப்போடு இல்லை , தடங்கலுக்கு மனம் வருந்துகின்றோம்…”

நாங்கள் சடங்குகளோடு
முடங்கியிருந்தோம்
சம்பிரதாயங்களுக்குள்
மூழ்கியிருந்தோம்,
நடந்தவைபற்றி விவாதம் செய்து
நாட்களை நகர்த்தியிருந்தோம்,

நிரந்தரமாய் எமக்காயிருந்த
வளங்களை நீறாக்கிக்கொண்டிருந்தோம்.
கடந்துபோக முடியாத பலவீனங்களுள்ளே
பலியாகிக்கொண்டிருந்தோம்..

பிரிந்த உயிர்கள் பறந்துபோக, மீதமுள்ளவற்றில் குறைந்தளவே
கரிசனை கொண்டிருந்தொம்,
அறிந்து வளர்த்த அறம் தொலைத்து
ஆணவம் கொண்டிருந்தோம்…

விரைந்து உருண்டோடிய வாழ்வுச்சக்கரத்தில், -எம்
இளைய தலைமுறையின்
எதிர்காலத்தை எரியூட்டிக்கொண்டிருந்தோம்…

விழுந்தது மரண அடி,
ஆம் மரணம் ஒன்றுதான்
மனிதனை மனிதனாக யோசிக்கவும், நேசிக்கவும் கற்றுக்கொடுக்கிறது…

மன்னனாகக் கனவுகண்ட இளவரசன்,
மாபெரும் சாம்ராச்சியத்தின் முதல்மந்திரி,
மரியாதைக்குரிய முதற்பெண்மணி
தெரியாதோர் இன்னும் யார்யாரோ!

படித்தவன், பாமரன்,
பசித்தவன், பணக்காரன்
நடித்தவன், நாடுநாடாய்ப் பிடித்தவன்
நாசவேலைகள் புரிந்தவன்,
நல்லவன், கெட்டவன்….

எல்லோர்க்கும் இன்று சூழ்நிலை ஒன்றுதான்!

மரணத்துக்கஞ்சி ஒழித்திருக்கவேண்டும்!
மரணத்துக்கஞ்சி தனித்திருக்கவேண்டும்!
மரணத்துக்கஞ்சி விழித்திருக்கவேண்டும்!
மரணத்துக்கஞ்சி பசித்திருக்கவேண்டும்!

சிறிய திருத்தம்!

“தடங்கலுக்கு மனம் வருந்துகின்றோம்! உலகம் எப்பொழுது முதலோ உயிர்ப்போடில்லை மீண்டும் மனிதம் உயிர்த்தவுடன் அறியத்தருகின்றோம்…”
-காந்தள்-

Comments
Loading...