Designed by Iniyas LTD
ரஷ்ய விமான விபத்திற்கு வெடிகுண்டு காரணமாக இருக்கலாம்: பிரிட்டன், அமெரிக்கா தகவல்
சினாய் பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்துப் பேசிய பிரிட்டன் வெளியுறவு அமைச்சர், ரஷ்ய விமானத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் விமானம் நொறுங்கி விழுந்திருக்கக் கூடும் என்று குறிப்பிட்டு்ள்ளார். இதனை அடுத்து எகிப்தின் ஷார்ம்-எல்-ஷேக்கின் இருந்து விமானங்களை இயக்குவதை நிறுத்துவதாகவும் பிரிட்டன் அறிவித்துள்ளது. மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹேமண்ட் கூறியுள்ளார்.
இதே போல், அமெரிக்க பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும், விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இருப்பினும் முழுமையான விசாரணைக்குப் பின்னரே உண்மையான காரணம் தெரியவரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே விமானத்தின் கருப்புப் பெட்டியில் பதிவான உரையாடல்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும், இருப்பினும் போதுமான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று எகிப்தின் ஷார்ம்-எல்-ஷேக்கில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர் நோக்கி 224 பேருடன் பயணித்த ஏ321ரக விமானம் நொறுங்கி விழுந்தது. இந்த விமானத்தை வீழ்த்தியது தாங்கள்தான் என ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் தெரிவித்துள்ள போதிலும், இதனை ரஷ்யா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் மறுத்துள்ளன.