Designed by Iniyas LTD
ராகவேந்திர கணேசன் பலியானதாக பெல்ஜியம் அறிவிப்பு!
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் விமான நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் கடந்த 22 ஆம் தேதி பயங்கர தாக்குதல் நடத்தினர். அதில், 35 பேர் பலியானார்கள். 2 இந்தியர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு பிறகு, பிரசல்சில் பணியாற்றி வரும் சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பணி நிமித்தமாக பெல்ஜியம் சென்ற இன்போஸிஸ் நிறுவன ஊழியரான ராகவேந்திர கணேசன் என்ற அவர், குண்டு வெடிப்புக்கு பிறகு மாயமானார். பலியானவர்கள் பட்டியலிலோ, காயம் அடைந்தவர்களின் பெயர் பட்டியலிலோ அவரது பெயர் இடம் பெறவில்லை என்பதால், அவர் எப்படி எங்கு உள்ளார் என்பது குறித்து தகவல் தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில், குண்டு வெடிப்பில் ராகவேந்திர கணேசனும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் போது, இவர் உயிரிழந்தது கண்டறியப்பட்டது தெரிய வந்ததாக பிரசல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை பெல்ஜியத்துக்கான இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவுத்துறையும் உறுதிப்படுத்தியுள்ளன. மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த அவர் குண்டு வெடிப்பில் பலியானதாக பெல்ஜிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு எடுத்து வரப்படும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.