Designed by Iniyas LTD
லண்டன் உள்ளுராட்சி அரசுடனான ஒப்பந்தத்தில் எந்த பயனுமில்லை?
லண்டன் கிங்ஸ்ரன் உள்ளூராட்சி அரசுடன் வட மாகாண முதலமைச்சர் செய்த ஒப்பந்தம் காரணமாக எமது மக்களிற்கு நன்மையுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் தவறான கருத்தைப் பரப்புகின்றார் என வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபையின் 71வது நேற்றைய அமர்வில் இடம்பெற்ற முதலமைச்சரின் அமைச்சுக்களிற்கான 2017ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாத்த்தின்போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்.
லண்டன் கிங்ஸ்ரன் உள்ளூராட்சி அரசுடன் யாழ் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான இரட்டை ஒப்பந்தம் என்ற பெயரில் வட மாகாண முதலமைச்சர் செய்த ஒப்பந்தம் காரணமாக எமது மக்களிற்கு எந்த விதமான நன்மையும் கிடையாது. அதற்கும் அப்பால் ஒக்டோபர் மாதம் 18ம் திகதியே குறித்த ஒப்பந்தம் இடம் பெற்றதாக கூறப்பட்டது. அக்காலத்திலேயே முதலமைச்சரும் அங்கு சென்றார்.
உண்மையில் மார்ச் மாதம் 30ம் திகதியில் முதலமைச்சரும் யூன் மாதம் 6ம் திகதியன்று கிங்ஸ்ரன் உள்ளூராட்சி மன்றத்தினரும் திகதியிட்டு ஒப்பம் இட்டுவிட்டனர். இதில் கல்வி , சுகாதாரம் , அபிவிருத்தி , கலாச்சாரம் , அரசாட்சி ஆகிய 5 துறைகளில் நன்மையுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எத்துறையிலும் ஓர் விடயத்தில்கூட நன்மையில்லை.
இதற்கும் அப்பால் வட மாகாண முதலமைச்சருக்கு அதிகாரமில்லாத ஓர் விடயம் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கல்வியின் கீழ் கிங்ஸ்ரனில் உள்ள பல்கலைக் கழக்கத்திற்கும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கும் இடையில் உறவுப்பாலமாக செயல்பட முதலமைச்சர் ஏற்பாட்டாளராக செயல்படுவார். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பாட்டாளராக செயல்பட யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் முதலமைச்சருக்கு அனுமதியளித்ததா? .
இதற்கு அப்பால் கல்வியில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றுமோர் விடயம் இங்குள்ள பாலர் பாடசாலைகளிற்கு அங்குள்ள பாலர் பாடசாலைகள் உதவுதல் இங்கு 800 பாலர் பாடசாலைகள் உண்டு அதில் எத்தனைக்கு என்ன உதவிகள் கிட்டும் என்பது கூடக்கிடையாது.
இதேபோல் சுகாதாரத்தினைப் பொறுத்தவரையில் கிங்ஸ்ரனில் உள்ள வைத்தியசாலைகளில் தேவைக்கு அதிகமாகவுள்ள பொருட்களை வழங்குதல் என்றே கூறப்பட்டுள்ளது.
இவற்றிற்கும் மேலாக அபிவிருத்தி என்பதே இன்று எமது முக்கியதேவையாகவுள்ள நிலையில் இங்கு என்ன கூறப்பட்டுள்ளது என்றால் யாழில் உள்ளோர் ஐக்கியராச்சியத்தில் முதலிடுவதானால் கிங்ஸ்ரனில் முதலிடவும் கிங்ஸ்ரனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் யாழில் முதலிட விரும்பின் கிங்ஸ்ரன் சபை அனுசரனையாக இருக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.
கலாச்சாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் தொடர்பான கலாச்சாரம் படிப்போம் அரசாட்சியில் இங்குள்ள அரசாட்சி முறைகள் கற்றல் என கூறப்படுகின்றது. இவற்றிற்கு எதற்கு ஒப்பந்தம் . என கேள்வி எழுப்பினார்.
இவை எவற்றிற்கும் முதலமைச்சர பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.