Designed by Iniyas LTD
வங்கிகளுக்கான கடன் வட்டியை அரை சதவிகிதம் குறைத்தது : ரிசர்வ் வங்கி அறிவிப்பு
வங்கிகளுக்கான கடன் வட்டியை ரிசர்வ் வங்கி அரை சதவிகிதம் குறைத்து அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான நிதிக் கொள்கை மீதான மறுஆய்வுக் கூட்டம், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் மும்பையில் இன்று நடந்தது.
அதில் ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் குறுகிய காலக் கடன் வட்டியான ரெப்போ விகிதத்தை அரை சதவிகிதம் குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, 7.25 சதவிகிதமாக உள்ள கடன் வட்டி 6.75 சதவிகிதமாக குறைந்துள்ளது.
எனினும், வங்கிகள் பராமரிக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதம் 4 சதவிகிதமாக நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் வட்டி குறைப்பால், ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் செலுத்த வேண்டிய வட்டி குறையும் என்பதால், வாடிக்கையாளர்கள் பெறும் வீடு, வாகனம் மற்றும் தொழில் கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் வளர்ச்சியை அதிகரிக்க வட்டியைக் குறைக்க வேண்டும் என அரசு, தொழில் துறை அமைப்புகள் வலியுறுத்திய நிலையில், வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது.