Designed by Iniyas LTD
வசீம் தாஜுதீன் கொலை வழக்கு முடக்கிவிடப்பட்டுள்ளது
ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை மற்றும், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டமை தொடர்பான வழக்குகள், தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை, புதிய காவல்துறை மா அதிபராக பூஜித ஜெயசுந்தர நியமிக்கப்பட்டதையடுத்தே, இந்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து. தாஜுதீன் கொலை பற்றிய தகவல்களை மறைத்த காவல்துறை ஆய்வாளர் சுமித் சம்பிக்க நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கிலும், அப்போது பணியில் இருந்து இராணுவ உயர் அதிகாரிகளை, விசாரணை செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், பிரகீத் எக்னெலிகொடவை யார் கடத்திச் சென்றது, அவர் கடத்தப்பட்ட வாகனத்தின் அடையாளம் என்ன, கிரித்தல இராணுவ முகாமில் இருந்து அக்கரைப்பற்றுக்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறிலங்கா இராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்குத் தெரியாமல் இந்தச் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். எனவே அந்தக் காலகட்டத்தில், பணியில் இருந்த உயர் இராணுவ அதிகாரிகளை விசாரணை செய்வது குறித்து. சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர்.