Designed by Iniyas LTD
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடமாகாணசபையால் பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளது
சென்னையில் கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடமாகாண சபையால் 11 லட்சத்து 20 ஆயிரம் இலங்கை ரூபாய் சேகரிக்கப்பட்டு தமிழ் நாட்டு முதலமைச்சர் நிதியத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக வைப்பு செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெள்ள அனர்த்தத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக வடமாகாண சபையினால் வெள்ள நிவாரண நிதி சேகரிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரையில் நிதி சேகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கென பிரத்தியோக வங்கி கணக்கும் மாகாண சபையினால் ஆரம்பிக்கப்பட்டது. அதில் வடமாகாண மக்கள் அனைவரும் தமது நிதி பங்களிப்பினை செலுத்துமாறு வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கோரியிருந்தார். அத்துடன் மாகாண சபை உறுப்பினர்கள் 38 பேரும் தமது பங்களிப்பாக 4லட்சத்து 50ஆயிரம் ரூபாயினை வழங்கியதாகவும் அவைத்தலைவர் தெரிவித்தார். அத்துடன் இந்த நிதி சேகரிப்பு பணி முடிவடைந்ததும், எமது சார்பில் ஒரு பிரதிநிதி தமிழகம் சென்று தமிழக முதலமைச்சரிடம் வழங்குவார்.
அல்லது தமிழக முதலமைச்சரின் நிதியத்துக்கு ஒன்லைன் மூலமாக அனுப்பப்படும். எனவும். அவ்வாறு வழங்கப்படும் நிதி தொடர்பில் வெளிப்படைத்தன்மை பேணப்பட்டு ஊடகங்கள் ஊடக தகவல்கள் வெளியிடப்படும் என்றுமு; தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த நான்கு மாத காலமாக அந்த நிதி எவ்வாறு கையளிக்கப்பட்டது, எவ்வளவு நிதி சேர்ந்தது என்பது தொடர்பில் எவ்விதமான தகவலும் அவைத்தலைவரினால் வெளிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் வெள்ள நிவாரணத்திற்காக சேர்ந்த பணம் 11 லட்சத்து 20 ஆயிரம் இலங்கை ரூபாய் சேகரிக்கப்பட்டது எனவும் அதனை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழ் நாட்டுக்கு சென்று தமிழ் நாட்டு முதலமைச்சர் நிதியத்தில் வைப்பு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.