Designed by Iniyas LTD
வடக்கு ஆளுநர்! புதிய மொந்தையில் பழைய கள்ளா?
வடக்கில் தமிழ் மக்களை புரிந்துகொள்ளக்கூடிய ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கடந்த காலத்தில் தமிழர் தரப்பால் வலியுறுத்தப்பட்டது. வடகிழக்கு இணைக்கப்படவேண்டும் என்றும் மாகாணத்திற்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்றும் குறைந்த பட்ச கோரிக்கை விடுக்கப்பட்டபோது வடகிழக்கை சிங்கள அரசு பிரித்தது. அத்துடன் வடக்கிற்கு முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை ஆளுநராக பதவி அமர்த்தியது.
யாழில் நடைபெற்ற பல்வேறு படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய மேஜர் ஜெனரல் சந்திரசிறியை ஸ்ரீலங்காவின் முன்னைய அரசான மகிந்த அரசு ஆளுநராக நியமித்தது. கிழக்கு மாகாணத்திலும் இராணுவத்தில் தலைமைப் பதவி வகித்தவரே ஆளுநராக நியமிக்கப்பட்டார். தமிழ் ஈழத்தில் இராணுவத்தினரை ஆளுநர்களாக்குவதன் ஊடாக இராணுவக்கட்டுப்பாட்டில் தமிழர வைத்திருப்பது முதல் நோக்கமாகும்.
அடுத்து இராணுவத்தில் இருந்தவர்களே தமிழ் மக்களை எவ்வாறு அழிப்பது ஒடுக்குவது என்பதை இராணுவ நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளுவார்கள். முழுக்க முழுக்க இராணுவ மயப்படுத்தப்பட் சூழலில் இராணுவத்தின் நடவடிக்கைகளை எளிதாக்க இதுவே உகந்த வழி என்று முன்னைய அரசு கருதியது. அதாவது தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க இராணுவத்தை ஆளுநராக்கியது.
அதன் பின்னர் ஆட்சிப் பெறுப்பேற்ற மைத்திரி – ரணில் அரசு ஐ.நாவில் பணியாற்றிய பளிஹக்காரவை ஆளுநராக நியமித்தது. மகிந்த ராஜபக்ச இராணுவத்தில் பணியாற்றியவரை நியமித்து தனது அதிகாரத்தை காட்ட முற்பட்டு சர்வதேசத்தின் இலக்குக்கு காரணமான நிலையில் அந்த இலக்கிலிருந்து தப்ப பளிஹக்காரவை மைத்திரி ரணில் அரசு அமர்த்தியது.
இப்போது புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆளுநர்கள் 13ஐ குறித்து மௌனம் காத்திருந்தார்கள். இவரோ 13க்குரிய அதிகாரங்கள் இருந்தாலே தன்னால் சேவையாற்ற முடியும் என்று கூறியுள்ளார். தமிழ் மக்கள் அதியுட்ச சமஷ்டியை கோரிக் கொண்டிருக்கும் நிலையில் மாகாணங்களுக்கு 13 நடைமுறைப்படுத்த வேண்டும் என்று புதிய ஆளுநர் கூறுவதும் சற்று சிந்திக்கத்தக்கது.
கடந்த சில நாட்களின் முன்னர் புதிய ஆளுநர் கூறிய ஒரு கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இனப்பிரச்சினைக்கு தீர்வு இனக்கலப்பு திருமணம் என்று ரெஜினோல்ட் குரே சொல்லியிருக்கிறார். இதைத்தான் கடந்த காலத்தில் சந்திரசிறி போன்றவர்கள் மகிந்த தலைமையில் சொல்லியும் செய்தும் இருக்கிறார்கள். இனக்கலப்பு திருமணமும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் ஒன்றுதான்.
ஸ்ரீலங்கா அரசைப் பொறுத்தவரையில் அவை இனப்பிரச்சினையை துடைத்துக் கட்டும் நடவடிக்கை. ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவை இன அழிப்புக்கான நடவடிக்கைகள். ஆக வடக்கில் புதிய ஆளுநரை போட்டாலும் அவரது புத்தியில் எந்த மாற்றமும் இல்லை. அவரும் தமிழ் மக்களை தனித்துவமான இனமாக இருக்காமல் சிங்கள இனத்துடன் கலந்து அழியுமாறு கூறுகிறார். மிக மிக கண்டிக்கத்தக்கதும் விளைவு மிக்கதுமாக கருத்து இது.
ஆக புதிய மொந்தையில் பழைய கள்ளே ரெஜினோல்ட் குரே என்ற புதிய ஆளுநர். வடகிழக்கு இணைக்கப்பட்ட சமஷ்டி தேசத்தில் தமிழ் பேசும் ஆளுநரே வேண்டும் என்பதை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்துவதான் சிங்கள ஆளுநர்களின் இத்தகைய எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளியாகும்.
ஆசிரியர்,
செண்பகம்.
29.02.2016
