Designed by Iniyas LTD
வட மாகாணத்தில் இன்று கதவடைப்பு!
வவுனியாவில் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஹரிஷ்ணவி என்ற மாணவிக்கு நடந்த கொடூர சம்பவத்தை கண்டித்து இன்று வட மாகாணம் முழுவதும் இரண்டு மணிநேரம் பூரண கதவடைப்பை அனுஷ்டிக்குமாறு பொது மக்களை இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் மற்றும் யாழ். வணிகர் சங்கம் என்பன கோரியுள்ளன.
இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வவுனியா உக்கிளாங்குளத்தில் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியின் கொலையைக் கண்டித்து இன்று நடைபெறவுள்ள கதவடைப்புக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தமது முழு ஆதரவை வழங்குகின்றது.
எமது பிரதேசங்களில் நடைபெறும் வன்முறைகளுக்கும், கொடுமைகளுக்கும், அரக்கத்தனங்களுக்கும் இது வரை எந்த நீதியும் கிடைத்ததில்லை. அகிம்சைவழியில் நாம் செய்கின்ற எந்த எதிர்ப்பு நடவடிக்கைகளும் இதுவரை பயனைத் தந்ததில்லை. காலம் காலமாக நாம் அனுபவித்துவருகின்ற துன்பங்களும், துயரங்களும் சொல்லில் அடங்காதவை. இதற்காக நாம் எத்தனை வடிமான போராட்டங்களை முன்னெடுத்தோம். அவற்றுக்கெல்லாம் இன்று வரை நீதியான எந்தத் தீர்வுகளும் கிடைக்கவில்லை.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையைக் கண்டித்தும், நீதி வழங்குமாறு கோரியும் பிரமாண்டமான ஒன்று கூடல் முன்னெடுக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கானவர்கள் அதில் பங்கேற்றனர். வடபுலம் முழுவதும் ஸ்தம்பித்து நீதிகேட்டு ஆர்ப்பரித்தனர். ஆனால் இன்று வரை அதற்கான நீதி கிடைக்கவில்லை. ஆனால் மாணவர்கள் மீதான வன்புணர்வு கொலைகள் நடந்தவண்ணம் உள்ளன. சட்டத்தையும், சமூகத்தையும் ஏமாற்றி தாம் நினைத்ததைச் செய்யும் துஷ்டர்கள் இந்த நாட்டில் உள்ளவரை எமக்கு நீதி கிடைக்கப்போவதில்லை.
ஆனாலும் அகிம்சை வழியை நாம் கைவிடக்கூடாது என்பதற்காக இன்று நடைபெறவுள்ள கதவடைப்புக்கு எமது சங்கம் முழு ஆதரவை வழங்குவதோடு அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார் ஆளணியினர், மாணவர்கள் பாடசாலை வளாகத்தில் காலை இரண்டு மணிநேரம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளது.
அதே வேளை க.பொ.த.சாதாரணதர மாணவர்களுக்கு நடைபெறவுள்ள செய்முறைப் பரீட்சையில் எவ்வித இடர்ப்பாடுகளும் ஏற்படாதவண்ணம் எதிர்ப்பை வெளிப்படுத்துமாறும் கோருகிறது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹர்த்தால் அனுஷ்டிப்புத் தொடர்பில் யாழ் வணிகர் கழகம் அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி செல்வி கங்காதரன் ஹரிஸ்ணவியின் படுகொலையை யாழ் வணிகர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. குறிப்பாக இச் சம்பவம் வட பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவமாகும். இச் சம்பவம் எமது மக்கள் மத்தியில் ஆழ்ந்த துயரத்தையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட வித்தியா என்ற பாடசாலை மாணவியின் கொலை நடைபெற்ற ஒரு வருடத்திற்குள் இவ்வாறான இரண்டாவது சம்பவம் இடம் பெற்றமை கண்டிக்கப்படவேண்டியதாகும். அரசாங்கமும் அதனோடு இணைந்த நீதித்துறை, காவல்துறை என்பன தீவிரமாக செயல்பட்டு இவ்வாறான சம்பவங்கள் இனியாவது இடம்பெறா வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.
மேலும் இக் கொலையை கண்டித்தும் நீதி கோரியும் வவுனியா பிரஜைகள் அமைப்பு நேற்று மாலை 4.30 மணியளவில் மின்னஞ்சல் மூலம் கேட்டுக்கொண்டதற்கு அமைய அவசர நிர்வாக சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைவாக இன்று புதன்கிழமை இரண்டு மணிநேர கடையடைப்பில் குறிப்பாக காலை 8.00 மணி தொடக்கம் முற்பகல் 10.00 மணி வரை மட்டும் கடைகளை புட்டி அமைதியான முறையில் தங்கள் கண்டனத்தை தெரிவிக்குமாறு யாழ் வணிகர் கழகம் சகல வர்த்தகர்களையும் கேட்டுக்கொள்கின்றது.