Designed by Iniyas LTD
சம்பூர் கடற்படை முகாம் அகற்றப்படுவது உறுதியாம்!
சம்பூரில் காணப்படும் பிரதான மூன்று கடற்படை முகாம்களில் ஒன்றை மட்டுமே அரசாங்கம் இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் குறித்த இடமாற்றம் காரணமாக எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் ஏற்படப் போவதில்லை என ஸ்ரீலங்கா பிரதியமைச்சர் அஜித். பி. பெரேரா உறுதியளித்தார்.
அத்துடன் முன்னைய ஆட்சிக்காலத்தின்போது கைச்சாத்திடப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள சம்பூர் அனல் மின் நிலைய ஒப்பந்தம் திருத்தம் செய்யப்பட்டு மீளவும் கைச்சாத்திடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சம்பூர் அனல்மின் நிலையம் நிறுவப்படுவதனூடாக சுற்றுச் சூழலுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது. மேலும் இதன்போது எமக்கெதிராக எழும் எந்தவொரு அழுத்தத்துக்கும் அஞ்சபோவதில்லை என்றும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முனனாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தின்போது சம்பூரில் அனல்மின் நிலையமொன்றை நிர்மாணிக்கும் முகமாக இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது. குறித்த ஒப்பந்தத்திற்கு எதிராக நாட்டில் பெரும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்தன. இதன்காரணமாக சம்பூர் அனல்மின் நிலைய பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் குறித்த ஒப்பந்தத்தில் உள்ள பாரதூரமான அம்சங்கள் மீள்திருத்தம் செய்யப்படவுள்ளன. இதன்படி சம்பூர் அனல்மின் நிலையத்தினை நிர்மாணிப்பதற்கான புதிய ஒப்பந்தம் இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ளது.
குறித்த செயற்றிட்டத்துக்காக இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே ஐம்பதுக்கு ஐம்பது என்ற வகையில் சமவுரிமை காணப்படுகின்றது. எனவே இருநாடுகளுக்குமிடையே உள்ள சம்மந்தப்பட்ட தரப்பினரிடையே இவ்வருடத்திற்குள் கேள்விமணு கோரப்படவுள்ளது.
இதனூடாக 500 மெகா வோல்ற் மின்சாரத்தினை பெறமுடியும் என எதிர்ப்பார்க்கப்படுகின்ற்து. மேலும் குறித்த திட்டத்தின் நிர்மாணப்பணிகளை 2022 ஆம் ஆண்டு நிறைவுசெய்யவும் எதிர்ப்பார்த்துள்ளோம்
குறித்த அனல்மின் நிலையத்துக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படும். இதனூடாக நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறையை முற்றாக நிவர்த்தி செய்ய முடியும். மேலும் தற்போது குறித்த திட்டத்திற்கான சுற்றாடல் சார் அனைத்து மதிப்பீடுகளும் நிறைவடைந்துள்ள நிலையில் சூழலுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாது என்பது தெளிவாகியுள்ளது.
இதனடிப்படையில் கழிவுப்பொருட்கள் அகற்றல் தொடர்பில் விசேட மாற்று வழிமுறைகள் கையாளப்படும். எனவே மக்களின் எதிர்காலத்தினை மட்டும் கருத்திற்கொண்டே குறித்த திட்டம் கைச்சாத்திடப்படவுள்ளது. எனவே இந்த செயற்றிட்டம் செயற்படுகையில் எமக்கெதிராக எழும் எந்தவொரு அழுத்தத்துக்கும் அஞ்சபோவதில்லை என்றார்.
கடற்படை முகாம்கள்
சம்பூரில் மூன்று பிரதானமான கடற்படை முகாம்கள் உள்ளன. இவற்றில்ஒரு முகாம் மாத்திரமே இடமாற்றம் செய்யப்படவுள்ளது.
குறித்த முகாமை இடமாற்றம் செய்வதற்கு அங்குள்ள கடற்படையினர் பூரண ஒத்துழைப்பை எமக்கு வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். எனவே தற்போதுள்ள முகாமிலிருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்தில் புதிய முகாமினை நிர்மாணிக்க தீர்மானித்தோம். மேலும் யுத்தத்தின்போது இடம்பெயர்ந்தவர்கள் மீளவும் சம்பூரில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த திட்டத்தை செயற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும் இங்கு நாம் பயணித்த போது புதிய பிரச்சினைகள் ஏற்படவதற்கான எந்தவொரு சாத்தியக்கூறும் தென்படவில்லை. ஆகவே சம்பூர் கடற்படை முகாம் இடமாற்றம் செய்வதனூடாக தேசிய பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தலும் ஏற்படாது என்றார்.