Designed by Iniyas LTD
வரும் மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல்
தமிழக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான ஆயத்தப்பணியில் ஈடுபட்டு வருகிறது. தேர்தலை எப்படி நடத்தவேண்டும் என்று முதல்கட்டமாக மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் அதிகாரிகள் ஆகியோரை அழைத்து பயிற்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டம் 4 ஆக பிரித்து மண்டல அளவில் நடத்தப்படுகிறது.
ஏற்கனவே கோவையிலும், மதுரையிலும் பயிற்சி கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. 3-வதாக சென்னையில் இன்று (வியாழக்கிழமை 28/01/2016) கூட்டம் நடத்தப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு பயிற்சி கூட்டம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நடக்கிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமை தாங்குகிறார்.
கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் அதிகாரிகள், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். தேர்தல் பாதுகாப்பு அளிப்பது குறித்து பேசப்பட உள்ளது. மேலும் தேர்தல் தொடர்பான பயிற்சியும் அளிக்கப்பட இருக்கிறது.