தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட மனு

யாழ்ப்பாணம்
கிளிநொச்சி
மட்டக்களப்பு மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நடாத்திய ஆர்ப்பாட்ட முடிவில் அவர்களால் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட மனு

அதிமேதகு மிசேலா பஸ்லெற் யெறியா,
ஜ.நா மனித உரிமைகள் ஆணையாளார்

அன்புடையீர்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமை தொடர்பானது. இன்று ஆகஸ்ட் 30 சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நீதி கிடைக்காது ஏங்கும் எமது மனவேதனையையும், ஆதங்கத்தை தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டுவருகின்றோம்.

சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பு யுத்தத்தின் போது அரச படைகளாலும், துணை இராணுவக் குழுக்களாலும் கைது செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், மற்றும் யுத்தத்தின் இறுதி நாட்களில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாகியும் வெளிப்படுத்தப்படவில்லை. மேற்படி விடயத்தில் நீதிக்கான செயன்முறைகளில் முன்னேற்றம் இல்லாமலிருப்பது தொடர்பில் தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.

2009 இல் சிறீலங்கா அரசு இனவழிப்பு ஒன்றின் மூலம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர் ஐ.நா செயலாளர் நாயகம் பாங்கி மூன் அவர்கள் மூவர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை நியமித்தார். போரின் போது கடைப்பிடிக்க வேண்டிய சர்வதேச சட்டத்தின் அனைத்து பரிமாணங்களையும், இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தத்தில் மீறியுள்ளதாக அந் நிபுணர்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியது. அதனைத் தொடர்ந்து ஜ.நா மனித உரிமைகள் பேரவை பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியது.

மார்ச் 2014 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு அவ்வறிக்கையானது சர்வதேச நீதிபதிகள், வழக்கு தொடுநர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படவேண்டும் என வலியுறுத்தியது. 2015 இல் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும், பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் ஆட்சியில் ஏறிய பின்னர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் 30ஃ1 இலங்கை அரசாங்கத்தின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் இலங்கை அரசாங்கம் மீளிணக்கம் சம்பந்தமாக ஓர் கலந்தாய்வு செயலணியை கண்துடைப்பிற்காக உருவாக்கியது. குறிப்பாக பரிந்துரைகள் ஓர் கலப்பு பொறிமுறை உருவாக்கத்தை வழிமொழிந்தது. எனினும் இவ்வறிக்கையானது அரசாங்கத்தினால் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை உருவாக்கும் செயன்முறைகளில் அவை முற்றாகப் புறமொதுக்கப்பட்டது.

காணாமல்போனோர் அலுவலகம்
2016 இல் நிறைவேற்றப்பட்ட சட்டமொன்றின் மூலம் காணாமல்போனோர் அலுவலகம் திறக்கப்பட்டது. அவ்வலுவலகம் 2018 இல் இருந்தே அமுலுக்கு வந்தது. 2018 இல் ஆணையாளார்கள் நியமிக்கப்பட்டார்கள். இவை வெறும் கண்துடைப்பிற்காகவே மேற்கொள்ளப்பட்டது. காணாமல்போனோர் அலுவலகம் பல வழிகளில் காணாமலாக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்ந்து ஆட்கொணர்வு மனுக்களில் பிரதிவாதிகளுக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சார்பாக அவர்களை பாதுகாக்கும் வகையில் தோன்றி வருகிறது. ஒட்டுமொத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களது உறவினர்களை அரசு ஏமாற்றிவருகிறது. காணாமல் போனோர்களுக்கான அலுவலகம்(omP) அமைச்சரவையின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அது சுயாதீனமற்றதாகவும் காணப்படுகின்றது.

30ஃ1 இல் உறுதிமொழி வழங்கப்பட்டவாறு வெளிநாட்டு வழக்கு தொடுநர்களை, நீதிபதிகளை நியமிக்க மாட்டோம் என சனாதிபதியும், பிரதமரும் எதிர்க்ககட்சித் தலைவரும் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளனர்.மேற்படி காரணங்களைச் சுட்டிக்காட்டி சிறீலங்கா அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டாம் எனவும், முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணைக்குப் பரிந்துரை செய்யுமாறும் கடந்த ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடருக்கு முன்னர் இலங்கையின் வடக்கு -கிழக்கைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்புக்கள், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புக்கள் மற்றும் ஏனைய ஒத்தகருத்துள்ள அமைப்புக்கள் மற்றும் நபர்களினால் இலங்கையில் நிலவிய சூழல் தொடர்பாகவும் சமாதானம் நீதி தொடர்பிலான செயன்முறைகளில் முன்னேற்றம் இல்லாமலிருப்பது தொடர்பிலும் கடிதம் ஒன்று தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அக்கடித்தில் வலியுறுத்தப்பட்ட விடயங்களை கவனத்தில் எடுத்து கடந்த ஜ.நா மனிதஉரிமைகள் பேரவையின் மார்ச் 2019 கூட்டத்தொடரில் நீங்கள் சமர்ப்பிக்கும் அறிக்கையில் உள்ளடக்குவீர்கள் எனும் எதிர்பார்பில் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் எமது எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக எமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு சிறீலங்கா அரசுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டமையானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமான அரச உயர்மட்டத் தலைவர்களும், இராணுவ உயரதிகாரிகளும் பொறுப்புக் கூறலில் இருந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பளித்துள்ளது. இதனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய எமக்கும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அதிமேன்மை தங்கிய தாங்கள் பின்வரும் நிகழ்ச்சிசார் தலையீடுகளை ஜ.நா மனிதஉரிமைகள் பேரவையின் செப்ரெம்பர் 2019 கூட்டத்தொடரிற்கு முன்மொழிய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

  1. சமர்ப்பிக்கும் அறிக்கையில் நீதியையும் பொறுப்புக் கூறலையும் சாத்தியப்படுத்த அவசியமான அரசியல் விருப்பு இலங்கை அரசிடம் இல்லை என்பதனால் ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் 2019 கூட்டத்தொடரில் ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்கிய கால அவகாசத்தினை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென தாங்கள் முன்மொழிய வேண்டுமெனவும்
  2. இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு, யுத்தக்குற்றங்கள், மனிதத்துவதற்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றை சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் ஊடாக மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது ஐ.நா செயலாளர் நாயகம் அவர்களுக்குப் பரிந்துரை செய்ய தாங்கள் வலியுறுத்த வேண்டுமெனவும்
  3. வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான ஐ.நா குழு இலங்கையை முழுமையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.நா செயலாளர் நாயகத்திற்குப் பரிந்துரைக்க வேண்டுமெனவும்.
  4. அ) இலங்கைக்கான விசேட ஜ.நா அறிக்கையாளரை நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையையும்,
    ஆ- வடக்கு – கிழக்கில் நிலவரத்தைக் கண்காணிக்கவும் மேம்படுத்தவும், உறுதுணையாகவும் இருக்க ஜ.நா மனித உரிமை ஆணையாளர் கள அலுவலகம் ஒன்றை வடக்கு – கிழக்கில் நிறுவவேண்டும் எனவும் மீளவும் வலியுறுத்துகின்றோம்.
    நன்றி
    வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 30.08.2019


Comments
Loading...