Designed by Iniyas LTD
வவுணதீவில் பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தீவிரவாதிகளின் சதித்திட்டம்..
கடந்த வருடம் நவம்பர் மாதம் மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தீவிரவாதிகளின் சதித்திட்டம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த நவம்பரில் மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.

இந்த சம்பவத்தை மேற்கொண்டவர் குண்டுத் தாக்குதலில் தொடர்புடைய சஹரானின் வாகன சாரதியான 53 வயதுடைய முகமது சாஹீர் ஆதம்பாலெப்பை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி முகமட் ஆசாத்தின் தாயார் மற்றும் வாகன சாரதி உட்பட 7 பேரை சந்தேகத்தின் பேரில் காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்திருந்தனர்.
இதன்போது அவரிடமிருந்து மடிக்கணணி மற்றும் கைத்துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அவரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே வவுணதீவு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் குண்டுத் தாக்குதலில் தொடர்புடைய சஹரானின் வாகன சாரதிக்கு தொடர்புள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரை கொழும்புக்கு கொண்டுச்சென்று விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.