Designed by Iniyas LTD
வவுணதீவு பொலிஸார் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தன் இன்று விடுதலை….
மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி அஜந்தன் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் 30ஆம் திகதி வவுணதீவு காவலரணில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் முன்னாள் போராளி அஜந்தன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதில் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அஜந்தன் தொடர்ந்தும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்ற குண்டுத்தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த குண்டு வெடிப்புக்களின் பிரதான சூத்திரதாரியான சர்ஹானின் வாகன சாரதி கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் வவுணதீவு பொலிஸாரை தாங்களே கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் வழங்கி இருந்தார்.
இதனடிப்படையில் அஜந்தனை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதற்கு அமைவாக இன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி தியாகேஸ்வரன் முன்னிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டபோது,
அஜந்தனை பிணையில் விடுவித்த பதில் நீதவான் எதிர்வரும் 13ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பணித்தார்.
இதனையடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அஜந்தன் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.