தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வாழ்வாதாரத்தை தேடி வேறு இடங்களுக்கு செல்லும் வலி. வடக்கு மக்கள்

வலி. வடக்கு பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் தமது வாழ்வாதாரத்திற்கு வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.  akathi

இப்பகுதியில் முன்பள்ளிகள் எதுவும் இல்லாததால் மீள்குடியேறியுள்ள மக்கள் தமது பிள்ளைகளின் ஆரம்ப கல்வியினை இப்பகுதியில் தொடரமுடியாத நிலைமையும் காணப்படுகிறது.   இவ்வருடம் கடந்த சித்திரை மாதம் குறித்த பகுதியில் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்படனர். 25 வருட கால இடைவெளியின் பின்னர் தமது சொந்த இடங்களில் மக்கள் மீள்குடியேறினர். இருந்தும் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் குடியேற அனுமதிக்கப்பட்டனர்.  இந்நிலையில் மக்கள் மீள்குடியேறி 7 மாதங்கள் முடிவுறும் நிலையில் மக்கள் முழுமையாக தமது வாழ்வை அங்கு தொடரமுடியாது உள்ளனர்.

இவ்வாறு மீள்குடியேறியுள்ள மக்களுக்கு அரைநிரந்தர வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து குடியேறும் மக்களுக்கு இந்த அரை நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இருந்தும் இந்த மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை தொழில் வாய்ப்பு. இப்பகுதியில் இருந்து கடந்த 1990ஆம் ஆண்டு மக்கள் இடம்பெயர்ந்து சென்ற காலகட்டத்தில் இவர்களின் வாழ்வாதாரம் விவசாயமாக இருந்தது.   தற்போது அந்த விவசாயக்காணிகள் விடுவிக்கபடாத உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருப்பதால் மக்கள் தமது வாழ்வாதரத்திற்காக சுன்னாகம், கோப்பாய் போன்ற பகுதிகளுக்கு தினமும் 8 கிலோ மீற்றர் துாரம் செல்ல வேண்டியுள்ளது.

மேலும் இப்பகுதியில் கல்வி சார்ந்த தேவைகள் முழுமையாக முன்னெடுக்கபடவில்லை முன்பள்ளிகள் ஆரம்பிக்கப்படவில்லை, ஆகையால் மக்கள் தமது பிள்ளைகளின் கல்வி தேவைகள் தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ளனர். மாணவர்களின் பாடசாலை மாற்றங்கள் வருட முடிவின் பின்னர் செய்யப்படுவதாலும் மக்களின் மீள்குடியமர்வுக்கான வருகையும் தாமதமாக உள்ளது.  இதுவரையில் இந்த மக்களுக்கு எந்த ஒரு தரப்பினராலும் நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இனிவரும் காலங்களில் கிடைக்கப்பெறவுள்ள வீட்டு திட்டத்தில் இப்பகுதி மக்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று யாழ். மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

Comments
Loading...