Designed by Iniyas LTD
விஞ்ஞானத் துறையில் மாணவர்களை மேலே கொண்டு வரவில்லையென்றால்,சிங்களமயமாக்கலை தடுக்கமுடியாது என கூறியுள்ளார் கலாநிதி க.சர்வேஸ்வரன் .
இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் விஞ்ஞானத் துறையில் மாணவர்களை மேலே கொண்டு வரவில்லையென்றால் , சிங்கள மயமாக்கலுக்குள் சங்கமமாகி சரணாகதி அடைகின்ற நிலைமையே ஏற்படும் என வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி ஹாட்லி கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முப்பது ஆண்டு கால போருக்குப்பின்னர் வடமாகாணத்திற்கு தேவையான தகுதி மிக்க வைத்தியர்களை தகுதி மிக்க பொறியியலாளர்களை தகுதி மிக்க ஆசிரியர்களை தகுதி மிக்க சிவில் சேவையாளர்களை சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களை நாங்கள் பெற முடியாமல் தேடிக்கொண்டிருக்கின்ற ஒரு துர்ப்பாக்கிய சூழல் எழுந்திருக்கிறதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக தென்னிலங்கையிலிருந்து பலரை இங்கே கொண்டுவரவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாங்கள் கல்வி கற்ற காலத்தில் விஞ்ஞானத்துறையில் ஐந்து துறைகள் மட்டுமே காணப்பட்டன என்றும் ஆனால் இன்று விஞ்ஞானத் துறையில் மட்டும் 27 இற்கும் அதிகமான துறைகள் பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்றதாகவும் அவர் நினவிபடுத்தியுள்ளார்.
அதோடு கணித விஞ்ஞானத்துறைகளில் தற்போது 40 இற்கும் அதிகமான துறைகள் காணப்படுகின்றன என்றும், குறிப்பாக ஹாட்லி கல்லூரி போன்ற அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள பாடசாலைகள் தமது மாணவர்களை 6 ஆம் தரத்திலிருந்தே அதிகமாக கணித விஞ்ஞானத் துறைகளை நோக்கி நகர்த்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்களுடைய யாழ் போதனா வைத்தியசாலை வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி வைத்திய சாலைகளில் வைத்தியர்கள்,தாதிகள் உள்ளிட்டோர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து மீண்டெழ வேண்டுனால் அதற்கான களம் பாடசாலைகள் தான் என்றும்,
எனவே வட மாகாணத்தில் அதிகமான மாணவர்களையும் அதிக வளங்களையும் கொண்ட பெரிய பாடசாலைகள் அதிக அக்கறை எடுக்க வேண்டும் எனவும் தான் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


