Designed by Iniyas LTD
விடுதலைப் புலிகளுடன் சண்டையிட்டது ரஷ்யாவா?
ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தி தமிழ் மக்களை அழித்திருப்பதை அண்மையில் பிரித்தானியாவின் தி கார்டியன் என்ற ஊடகம் அம்பலப்படுத்தியிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைக் கூட்டத் தொடர் நடைபெறும் ஒரு சூழ்நிலையில்,அங்கு தன்னை பாதுகாக்க நெளிந்து போராடும் ஸ்ரீலங்கா அரசுக்கு இந்த ஆதாரம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கம் கொத்துக் குண்டுகளை பாவித்தமை முன்பே ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டது. முன்னைய அரசாங்கம் அது குறித்து பதில் எதுவும் அளிக்கவில்லை. இனப் படுகொலை அரசு, தாம் கொத்துக் குண்டுகளை பாவிப்பதில் என்ன தவறு என்று கருதியிருக்கக்கூடும். ஈழப் போரின் இறுதியில் கொத்துக் குண்டுகளுடன், நஞ்சுக் குண்டுகள், நஞ்சு வாயு முதலியனவும் வீசப்பட்டு மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இவற்றுக்கான ஆதாரங்களாக கொல்லப்பட்ட மக்களின் புகைப்படங்கள் பல வெளிவந்திருக்கின்றன.
இதேவேளை இன்றும் கொத்துக் குண்டுகளின் தாக்கத்துடன், நஞ்சுக் குண்டுகளின் தாக்கத்துடன் பலர் ஈழத்தில் வாழ்கின்றனர். சிறுநீரக செயலிழப்பு, இருதய நோய்கள் முதலிய இத்தகைய தடைசெய்யப்பட்ட குண்டுகளினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ளன. இவை மக்களை போர்க்களத்தில் மாத்திரம் கொல்வதில்லை. போருக்குப் பின்னரும் மெல்ல மெல்ல மக்களை அழிக்கின்றது. இந்த நோக்கிலேயே இத்தகைய தடைசெய்யப்பட்ட குண்டுகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் பாவித்தது. இது வெளிப்படையான இன அழிப்பு சார்ந்தது.
கொத்துக் குண்டுகளை வீசி கொத்துக் கொத்தமாக மக்களை கொன்றது ஸ்ரீலங்கா. எத்தகைய குண்டுகளையும் வீசலாம், எப்படியும் ஈழ மக்களை பலியெடுக்கலாம் என்பதுதான் ஸ்ரீலங்கா அரசின் நிலைப்பாடு. இதுவே இனப்படுகொலை நிலைப்பாடு. உண்மையில் இவை இனப்படுகொலைப் போரின் ஆதாரங்கள். ஐக்கிய நாடுகள் சபை ஸ்ரீலங்கா அரசை பாதுகாத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் இந்த ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இதனை ஐக்கிய நாடுகள் சபை கண்டுகொள்ளுமா? இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமா?
ஆனால் ஸ்ரீலங்காவின் நல்லாட்சி அரசு, இந்தக் கொத்துக் குண்டுகளை தாம் பாவிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறது. அப்படி என்றால் ரஷ்ய நாடுதான் விடுதலைப் புலிகளுடன் சண்டையிட்டதா? அந்தக் குண்டுகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என்று தி கார்டியன் குறிப்பிட்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசுக்குத் தெரியாமல் எப்படி கொத்துக் குண்டுகள் வந்தன? இன்னும் சில காலத்தில், இன்னும் சில ஆட்சிகள் மாற ஸ்ரீலங்கா அரசு, போரிடவில்லை என்று கூறினாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தோன்றுகிறது.
ஆனால், கொத்துக் குண்டுகளை பயன்படுத்தவில்லை என்று முன்னைய மகிந்த அரசு தெரிவிக்கவில்லை. இன்றைய அரசில் பலர் இது குறித்து கள்ள மௌனம் சாதிக்கின்றனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மாத்திரம், தாம் கொத்துக் குண்டுகளை பாவிக்கவில்லை என்று உண்மையை மறைத்துள்ளார். ஸ்ரீலங்கா அரசு தான் ஆற்றிய இனப்படுகொலையை மறைக்கும் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. ஐ.நாவில் தன்னை எப்படி பாதுகாப்பது என்று போராடிக் கொண்டிருக்கிறது.
எனவே, இனப்படுகொலையை செய்த ஒரு அரசு, தன்னுடைய குற்றத்தை எப்படி ஒப்புக்கொள்ளும். கொத்துக் குண்டுகளை பாவித்தோம் என்பதை ஒப்புக்கொள்வது நாம் இனப்படுகொலையை செய்தோம் என்பதை ஒப்புக்கொள்வதாகவும். நீதியான சர்வதேச விசாரணையில் கொத்துக் குண்டுகள் பாவிக்கப்பட்டமை தொடர்பிலும் ஆழமான, உண்மையான விசாரணை நடத்தப்படவேண்டும். தம் குற்றத்தை ஒப்புக்கொள்ளாத அரசிடம் உள்ளக விசாரணையை ஐ.நா வழங்கினால் எப்படி அது அமையும் என்பதையும் இவைகள் உணர்த்துகின்றன.
தமிழவன்,
செண்பகம்.
22.06.2016
