Designed by Iniyas LTD
விடுமுறை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள்
பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாகி விட்டது. இதனை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்த போதிலும் முறைப்படுத்த தேவையான வழிமுறைகளை வகுக்கப்படவில்லை.
இதுவே கூடுதல் கட்டண வசூலுக்கு சாதகமாக உள்ளது. அரசு பஸ் மற்றும் ரெயில்களில் இடம் கிடைக்காதவர்கள் ஆம்னி பஸ்களை நாடுகிறார்கள். பொது மக்களின் தேவையை அறிந்துகொண்டு வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை விட பல மடங்கு உயர்வாக டிக்கெட் வசூலிக்கிறார்கள். தற்போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து திங்கட்கிழமை ஆயுத பூஜை, செவ்வாய்க்கிழமை விஜயதசமி, புதன்கிழமை மொகரம் என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையாகும்.
இதனால் சென்னையில் இருந்து லட்சக் கணக்கான மக்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்ய முன்பதிவு செய்து வருகின்றனர். சிறப்பு ரெயில்கள் வழக்கமான ரெயில்களில் இடமில்லை. இதனால் கடைசி நேரத்தில் பயணமாக ஆம்னி பஸ்களை நாடும்போது பெரும்பாலான ஆம்னி பஸ் நிறுவன வெப்சைட்டில் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு வழக்கமாக ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் தற்போது மல்டி ஆக்சில் பஸ்களில் ரூ.1500 முதல் ரூ.2600 வரை வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் விவரங்களை ஒவ்வொரு ஆம்னி பஸ் நிறுவனமும் வெப்சைட்டில் பகிரங்கமாக வெளியிட்டு வசூலிக்கிறது.
இடம் கிடைத்தால் போதும் என்ற நிலையில் ஒரு சிலர் பல மடங்கு உயர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட் பெறுகின்றனர். சாதாரண, நடுத்தர மக்கள் ஆம்னி பஸ் பக்கம் செல்ல தயங்குகிறார்கள். அதிர்ச்சி அடையக் கூடிய வகையில் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள். பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலாக வசூலிக்கும் கட்டணத்தை பொது மக்களுக்கு திருப்பி தரவும் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகியிடம் கேட்டதற்கு, எங்கள் சங்கத்தில் உள்ள யாரும் இது போன்று வசூலிப்பது இல்லை. எப்போதும் போல நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையே வாங்குகிறோம்.
ஒரு சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் ஒட்டுமொத்த ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கும் கெட்டப் பெயர் ஏற்படுகிறது. எங்களுடைய ஆம்னி பஸ்களில் எப்போதும் ஒரே விதமான கட்டணமே வசூலிக்கப்படும் என்றார். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரியிடம் கேட்டதற்கு, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தீவிரமாக கண்காணிக்கிறோம். இன்று மாலை முதல் சிறப்பு படையினர் சோதனையில் ஈடுபடுவார்கள். கோயம்பேடு, பெருங்களத்தூர், பூந்தமல்லி, திருவான்மியூர், உள்ளிட்ட பல இடங்களில் இந்த சோதனை நடைபெறும். பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.