Designed by Iniyas LTD
வித்தியா கொலை வழக்கு கைதிகள் உண்ணாவிரதம் இருக்க முடிவு!
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சந்தேகத்தின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 சந்தேக நபர்கள் ஊர் காவற்றுறை நீதிமன்ற நீதிவான் முன்னிலை யில் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் பேசும்போது அவதானமாக பேசவேண்டும் எனவும் ஒரு வார்த்தை பிழையானாலும் அது பாரதூரமான விளைவை ஏற்படுத்திவிடும் என தெரிவித்த ஊர்காவற்றுறை நீதிவான், சந்தேக நபர்கள் பேசுவதாக இருந்தால் அவர்கள் சட்டத்தரணியூடாக பேசவேண்டும் எனத் தெரிவித்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த சந்தேகநபரில் ஒரு வர், வித்தியாவின் மரண வீட்டிற்கே தான் சென்றதாகவும் தன்னை கொலையாளி என பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் சந்தேக நபர்கள் நீதிவான் முன்னிலையில், தாம் குற்றம் செய்யவில்லை எனவும் தாம் குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இருந்தால் தம்மை தூக்கில்போடுமாறும் தெரிவித்ததோடு நீண்ட காலமாகியும் தமது விசாரணை பூரணப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தனர்.
அத்துடன் தம்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்த வலியுறுத்தி தாம் உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம்.றிஹாஸ்,
சந்தேக நபர்கள் நீதிமன்றில் பேசும்போது அவதானமாக பேசவேண்டும். ஒரு வார்த்தை பிழையானாலும் அது பாரதூரமான விளைவை ஏற்படுத்திவிடும். அத்துடன் இவ்வழக்குத் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை முடிவடைந்ததும் அது தொடர்பான அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே தண்டனைகள் வழங்கப்பட முடியும். மேலும் சந்தேக நபர்கள் நீதிமன்றில் பேசுவதாக இருந்தால் அவர்கள் சட்டத்தரணியூடாக பேசவேண்டும் எனத் தெரிவித்தார்.
சந்தேக நபர்களில் இறுதியாக கைது செய்யப்பட்ட பத்தாவது சந்தேக நபரான ராஜ்குமார் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி, குறித்த சந்தேக நபர் மனநோயாளியாக இருப்பதனால் அவரை கொழும்பு மகசின் சிறையிலிருந்து யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றவேண்டும் என நீதிவானிடம் கோரியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த நீதிவான் அவர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே மகசின் சிறைச்கு அவர் மாற்றப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதேவேளை வித்தியாவின் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளும் குறித்த படுகொலை வழக்குத் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தப்படவேண்டும் என மன்றில் நீதிவானிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் குறித்த மாணவியின் சடலம் நீதிமன்ற பணிப்புரைக்கமைய நிலத்தில் புதைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மாணவியின் இறுதிக் கிரியைகள் எதுவும் செய்யப்படாமலேயே உள்ளது. அதாவது குறித்த மாணவி இந்து மதத்தை சார்ந்தவராக உள்ளதனால் அவர்களது மதத்தின்படி ஒருவர் இறந்தால் அவரது உடல் தகனம் செய்யப்பட்ட பின்னரே அவரது இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளமுடியும் என மாணவியின் தாயார் கவலை வெளியிட்டதாக மன்றில் சட்டத்தரணி சுட்டிக்காட்டியிருந்தார்.
மரபணு அறிக்கை சமர்ப்பிக்காததால் ஒத்திவைப்பு
இதேவேளை, குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருக்காத நிலையில் குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் எட்டாம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.