தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வீட்டுத் திட்டம் தொடர்பில் மீளாய்வு செய்ய ரணில் உத்தரவு – சுமந்திரன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில் மீளாய்வு செய்யுமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.sumanthiran

இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தின் பரீட்சார்த்த வீடமைப்பு நடவடிக்கை தற்போது யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த வீடுகள் மக்களின் சாதாரண வீடுகளிலிருந்து – பாரம்பரிய வீடுகளிலிருந்து வேறுபட்டவையாக உள்ளன. அத்துடன் ஒரு வீட்டுக்கு 21 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கப்படுகின்றது.

மேலும் அமைக்கப்படும் வீடு, பொருத்தும் வீடாக (பிற்றிங்) உள்ளது. இதனால் இந்த வீடமைப்புத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் 21 லட்சம் ரூபாவைக் குறைத்து அந்த நிதியில் இரண்டு அல்லது மூன்று வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த விடயங்கள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்குக் கொண்டு சென்றது. இதனடிப்படையில், குறித்த வீட்டுத் திட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

Comments
Loading...