Designed by Iniyas LTD
வேளாண்மை படிப்புகளுக்கு அதிக மவுசு ஏறிவிட்டது
பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் உயர் கல்வியில் சேர பல்வேறு வழிகளில் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நேரம் இது. கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகளின் மீது மாணவர்களுக்கு இருந்த ஆர்வம் இப்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 600-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் 2 வருடமாக பொறியியல் கல்லூரிகளில் சுமார் 50 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேராததால் காலியாக உள்ளன. 
லட்சக்கணக்கான என்ஜினீயரிங் பட்டதாரிகள் படித்து விட்டு வேலையில்லாமல் இருப்பதே இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இடையே ஆர்வம் குறைந்துள்ளது. கடந்த வருடத்தை காட்டிலும் இந்த ஆண்டு குறைவான அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 1.5 லட்சம் பேர்தான் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதனால் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமல்லாது தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் நிரம்பாமல் பெரும்பாலான கல்லூரிகள் அந்த இடங்களை அண்ணா பல்கலைக்கழகத்திடம் சரண்டர் செய்து வருகிறது.
தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளை நடத்துவதே சிரமமான நிலையில் உள்ளது. எந்த அளவிற்கு பி.இ., பி.டெக் படிப்புகள் மீது முன்பு ஆர்வம் இருந்ததோ, இப்போது அதைவிட பல மடங்கு வீழ்ச்சியில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்சேர்க்கை நடைபெறுகிறது. ஐ.ஐ.டி. என்.ஐ.டி. போன்ற கல்லூரிகளில் என்ஜினீயரிங் படிப்புகள் படிப்பதற்கான ஆர்வமும் குறைந்து விட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் உள்ள சிறந்த இந்த கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக நடத்தப்படும் ஜே.இ.இ. (அட்வான்ஸ்) மற்றும் முதன்மை தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கையும் இந்த ஆண்டு தமிழகத்தில் குறைந்துள்ளது. தென் இந்தியாவில் தமிழகத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 4147 பேர் மட்டும்தான்.
ஆனால் தெலுங்கானாவில் 11,435 பேரும், ஆந்திராவில் 7,486 பேரும், கேரளாவில் 5,156 பேரும், கர்நாடகாவில் 4,901 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கு தயார் ஆவதை விரும்பாத மாணவர்கள் தற்போது பொறியியல் படிப்புகளை உதறி தள்ளிவிட்டு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருகிறார்கள். எவ்வித நுழைவுத் தேர்வும் இல்லாமல் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள். ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்து வங்கித்துறை, ரெயில்வே, மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வு எழுதி வேலைக்கு செல்லலாம் என்ற மனநிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
குறைந்த செலவில் 3 ஆண்டு கல்லூரி படிப்பை படித்து முடித்தவுடன் “போட்டித் தேர்வு”க்கான பயிற்சி வகுப்பிற்கு சென்று எளிதில் தேர்வில் வெற்றி பெற்று வேலை வாய்ப்பை பெற முடியும் என்ற நம்பிக்கை மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. பொறியியல் படிப்புகளில் சேர்ந்தால் உள் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு குறைவாக உள்ளதால் வேலை வாய்ப்பு தரும் படிப்புகளை ஆராய்ந்து தேர்வு செய்து படிக்கும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் வேளாண்மை படிப்புகளுக்கும் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. வேளாண்மை சார்ந்த தொழில்நுட்ப படிப்புகள் நிறைய உள்ளன. அதனை படித்தால் வேலைவாய்ப்பு எளிதாக கிடைக்கும் என்பதால் வேளாண்மை பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இது குறித்து கோவை வேளாண்மை பல்கலைக் கழக முதல்வர் மகிமை ராஜா கூறியதாவது:- இந்த ஆண்டு வேளாண்மை படிப்புகளில் சேர மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. 13 இளங்கலை விவசாய பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டை காட்டிலும் விற்பனை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. இளங்கலை பாடப்பிரிவில் 2600 இடங்கள் உள்ளன.
இதற்கு 39,872 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தை காட்டிலும் அதிகமாகும். கடந்த ஆண்டு 32,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விவசாயம் சார்ந்த துறைகளில் மாணவர்களுக்கு உடனே வேலை வாய்ப்பு இருப்பதால் ஆர்வத்துடன் வேளாண்மை படிப்புகளில் சேருகிறார்கள். வேளாண்மை படிப்புகளை முடித்தால் வங்கி துறைகள், ஆராய்ச்சி பண்ணைகள் மற்றும் அரசு வேலைகளில் மிக எளிதாக சேர முடியும். பாடத்திட்டங்கள் மாணவர்கள் போட்டித் தேர்வை எளிதாக சமாளிக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
துணை வேந்தர் கே.ராமசாமி கூறுகையில், “வேளாண்மை பாடப் பிரிவுகள் மாணவர்களுக்கு இன்றைய காலத்தில் எளிதாக வேலை கிடைக்கக் கூடியதாக அமைந்துள்ளது. பி.எஸ்.சி. வேளாண்மை படிப்பிற்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நமது பாரம்பரிய விவசாயத்தைப் பற்றி படிக்க 80 சதவீத மாணவர்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.