Designed by Iniyas LTD
வைகோவின் வழக்கு ரத்து
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட பொடா வழக்கை ரத்து செய்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி, கடந்த 2002-ல் வைகோ உள்ளிட்ட 9 பேர் மீது பொடா வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு இவ்வழக்கை ரத்து செய்ய பொடா நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனையடுத்து, வைகோ உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தை நாடுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதனையடுத்து, பொடா வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த அக்டோபர் 13-ம் தேதி, பொடா வழக்கை ரத்து செய்யுமாறு சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், பொடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோனி, பொடா வழக்கை இன்று ரத்து செய்து உத்தரவிட்டார். வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, இருவர் உயிரிழந்த நிலையில், வைகோ உள்ளிட்ட 7 பேர் மீதான பொடா வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது..