Designed by Iniyas LTD
ஸ்ரீ அரசின் கிபிர் தாக்குதலில் 500 இற்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலியானார்கள்!
இறுதி யுத்தத்தின் போது மக்கள் நிறைந்திருந்த பகுதிகளினை இலக்கு வைத்து இராணுவத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான கிபீர் குண்டுத் தாக்குதலில் 500 ற்கும் மேலான பொது மக்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்நிலையில் என்னோடு ஒன்றாக நின்ற எனது மகன் காணாமல்போயிருந்தார். அவர் எங்கே என தேடியபோதும் காணவில்லை. இந்நிலையில் சிதறிக்கிடந்த சடலங்களையும் தேடிப்பார்த்தேன்.
அங்கும் மகன் கிடைக்கவில்லை என்று பரணகம ஆணைக்குழு முன் தாய் ஒருவர் சாட்சியமளித்தார்.அத்துடன் காணாமல்போன பிள்ளைகள் தொடர்பில் இ பி டி பி யினரிடமே கேளுங்கள். அவர்கள் உங்கள் பிள்ளைகளை தருவார்கள்.
அத்துடன் பிள்ளைகள் தொடர்பான மரணசான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காணாமல் போனோர் தொடர்பாக கண்டறியும் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்ததாகவும் மற்றுமொரு தாயார் ஆணைக்குழுவிடம் நேற்று சாட்சியம் அளித்தார்.
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் நேற்றைய தினம் வேலணைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஐந்து பிரிவுகளாக இடம்பெற்றன. இதன்போதே அமர்வுகளில் கலந்துகொண்ட தாய்மார் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.
அல்லைப்பிட்டியை சொந்த இடமாகக் கொண்ட திருமதி. சுமனதாஸ் யேசுரட்ணம் என்னும் தாயார் சாட்சியமளிக்கையில்..
நாங்கள் காணாமல்போன மூன்று பிள்ளைகள் அடங்கலாக அல்லைப்பிட்டியில் குடும்பமாக வசித்து வந்திருந்தோம். 1990 ஆம் ஆண்டு ஆவனி மாதம் 25 ஆம் திகதி எமது பகுதியில் இடம்பெற்ற இராணுவ சுற்றிவளைப்பின்போது எனது மகன்களான விஜயரட்ணம்ரவி, சுகிர்தரட்ணம் ரகு, பிரேமரட்ணம் ரதன் ஆகிய மூவர் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட 600 பேர் பிடித்துச் செல்லப்பட்டிருந்தனர்.
அவ்வாறு பிடித்துச் செல்லப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில் எனது இரண்டாவது மகனும் மூன்றாவது மகனும் விடுவிக்கப்பட்டிருந்தனர். மூத்தமகன் விடுவிக்கப்படாத நிலையில் அப்போது ஏற்பட்ட இடப்பெயர்வில் நாம் மண்கும்பான் நோக்கி இடம்பெயர்ந்திருந்தோம். இவ்வாறு இருக்கும் போது அக் காலப்பகுதியில் இராணுவ கட்டளைத் தளபதியாக இருந்த கொப்பேக்கடுவவிடம் சென்று இராணுவ சுற்றிவளைப்பின் போது எனது மகன் பிடித்துச் செல்லப்பட்டுள்ளார் அவரை தயவு செய்து எம்மிடம் திருப்பித்தாருங்கள் எனக் கேட்டிருந்தோம். அதற்கு அவர் உங்களுடைய மகனை மீட்டுத் தருவோம் என பதிலளித்திருந்தார்.
இதற்குப் பின்னர் ஈ.பி.டி.பி. கட்சியினரிடம் சென்று எமது மகன் இராணுவ சுற்றிவளைப்பின்போது பிடிக்கப்பட்டதாகவும் அவரை மீட்டுத்தருமாறும் கோரியிருந்தோம்.
இத்தகைய நிலையில் 1990 புரட்டாதி மாதம் 23 ஆம்திகதி விடுவிக்கப்பட்ட இரண்டு மகன்களும் மீண்டும் இடம்பெற்ற இராணுவ சுற்றிவளைப்பின் போது இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டனர்.
பிடித்துச் செல்லப்பட்ட எனது மூன்று மகன்களையும் மீட்டுத்தருமாறு பலரிடம் நாம் கோரியிருந்தோம். எனினும் எத்தகைய பதிலும் கிடைக்கப்பெறாத நிலையில் மீண்டும் கொப்பேக் கடுவவிடம் சென்று எனது மூன்று பிள்ளைகளையும் இராணுவத்தினரே பிடித்துச் சென்றுள்ளனர் என முறையிட்டிருந்தேன். அதற்கு அவர் ஊர்காவற்றுறை சென்று பார்வையிட்டதன் பின்னர் பதில் கூறுவதாகத் தெரிவித்திருந்தார். எனினும் அவரிடமிருந்து எமக்குப்பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
காலப்போக்கில் திருகோணமலை சி.எம்.பி.இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கும் பட்டியலில் என்னுடைய மூன்று பிள்ளைகளின் பெயர் விபரங்கள் காணப்பட்டதாக எனக்கு வேறு ஒரு வழியூடாக தகவல் கிடைத்தது. அத் தகவல் வழியூடாக அந்த பெயர் விபரப்பட்டியலை நான் பெற்றிருந்தேன். அதில் என்னுடைய மூன்று பிள்ளைகளின் பெயரும் காணப்பட்டிருந்தன. எனினும் அத்தகைய எம்மால் அந்தக் காலப்பகுதியில் செல்வதற்கான அனுமதி எமக்கு கிடைக்கப்பெறவில்லை.
அத்துடன் அந்த முகாமில் ஒரு நாளே எமது பிள்ளைகளைத் தடுத்து வைத்திருந்துள்ளார்கள் என்பதை பின்னர் நான் அறிந்து கொண்டேன். இத்தகைய நிலையில் மீண்டும் நாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழலினால் இடப்பெயர்வின் நிமித்தம் வன்னிப் பகுதிக்குள் சென்றிருந்தோம். நாம் வன்னிப்பகுதியில் வாழ்ந்துவரும் காலப்பகுதியில் 1996 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 29 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் பணிப்பின் பேரில் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனேர் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த பதிவு இடம்பெறும் திகதிக்குள் சமூகமளிக்க முடியாத நிலையில் அந்த ஆண்டு ஆனிமாதம் 12 ஆம் திகதியே யாழ்ப்பாணத்திற்கு வந்து குறித்த சாட்சியத்தில் எனது பிள்ளைகள் தொடர்பில் பதிவினை வழங்கியிருந்தேன். இதன் போது சாட்சியங்களை பதிவு செய்த அதிகாரிகள் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட உங்கள் பிள்ளைகள் ஈ.பி.டி.பி கட்சியினரிடமே உள்ளனர் எனவும் அவர்களிடம் சென்று கேளுங்கள் என தெரிவித்தனர்.
அத்துடன் காணாமல்போன பிள்ளைகள் தொடர்பில் இறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் ஏனெனில் அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள் எனவும் அந்த அதிகாரிகள் என்னிடம் வாக்குறுதி வழங்கினர்.
இதன் பின்னர் ஈ.பி.டி. செயலாளர் நாயகத்தை சந்திப்பதற்கு பல தடவைகள் முயற்சித்தபோதும் சந்தர்ப்பம் எனக்கு கைகூடவில்லை. இவ்வாறு நீண்ட காலம் பிள்ளைப் பிடிகொடுத்த எமக்கு கண்ணீரே மீதமாகவுள்ளது. சாட்சியங்கள்தோறும் எமது பதிவுகள் பதியப்படுகின்றன. எனினும் எத்தகைய முடிவுகளும் கிடைக்கப்பெறவில்லை. தயவு செய்து காணாமல்போன பிள்ளைகளை ஒரு தடவையேனும் எனக்குக் காட்டிவிடுங்கள் என அந்த தாய் கண்ணீரோடு சாட்சியமளித்தார்.
கூட்டமைப்பிற்கு ஆரவாகச் செயற்பட்டமையால் மகன் கடத்தப்பட்டார் வேலணை 6ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் செட்டிச்சி எனும் தாயார் சாட்சியமளிக்கையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளனாக செயற்படக்கூடாது என ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் உறுப்பினர் அச்சுறுத்திய நிலையிலேயே எனது மகன் காணாமல் போயுள்ளார் .
எனது மகன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளனாக செயற்பட்டு வந்திருந்தார். இந்நிலையில் குறித்த கட்சியினோடு எந்தவிதத் தொடர்புகளையும் மேற்கொள்ளக் கூடாது என எனது மகன் கடத்தப்படுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்தே வேலணைப் பிரதேசத்தின் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் அமைப்பாளராக செயற்பட்டு வந்த ராம் தோழர் என அழைக்கப்பட்டவர் அச்சுறுத்தி வந்தார். அத்துடன் அத்தோழர் என்னிடம் வந்து எனது மகனை குறித்த கட்சிக்கு ஆதரவாகச் செயற்படவேண்டாம் எனவும் அச்சுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 21 ஆம் திகதி அதிகாலை 2.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் எமது வீட்டுக்கு வந்த இருவர் உங்களுடைய மகனை சந்திக்கவேண்டும் அவரை வெளியே வருமாறு கூறியிருந்தனர். நானும் எனது மகனின் நண்பர்கள் தான் என நினைத்து அவர்களை வெளியே நிற்க விட்டு எனது மகனைக் அழைத்தேன். மகன் வெளியே வர குறித்த இருவரும் அவரை வெளியே அழைத்துக் கொண்டு சென்றனர்.
வந்தவர்கள் யாரெனப் பார்ப்பதற்காக விளக்கினை ஒ ளிக்கச் செய்ய முற்பட்டபோது குறித்த இருவரும் எனது மகனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மேலும் பல மோட்டார் சைக்கிள்களுடன் சென்றிருந்தனர். என்னால் அந்த இரவு நேரத்தில் வந்தவர்கள் யார் என்பதை அடையாளம் காணமுடியவில்லை.
இதனையடுத்து விடிந்ததும் குறித்த ராம் தோழரிடம் சென்று எனது மகன் எங்கே எனக் கேட்டிருந்தேன். அதற்கு அவர் உங்களுடைய மகன் எங்குள்ளார் என்பது எனக்குத் தெரியாது என பதிலளித்திருந்தார்.
எனவே என்னுடைய மகனை அச்சுறுத்திய ராம்தோழரே கடத்தியிருப்பார் என குறித்ததாய் சாட்சியமளித்திருந்தார்.
இதேவேளை தனது மகன் தன்னுடன் இல்லாத நிலையில் பல்வேறு வகையான துன்பதுயரங்களை அனுபவித்து வருவதாகவும் பொருளாதார முன்னேற்றத்தினை மேம்படுத்துவதற்கான உதவிகளை வழங்கவேண்டும் எனவும் தமிழத்தேசியக் கூட்டமைப்பிடம் தான் கோரியதாகவும் அதற்கு அவர்களிடமிருந்து சாதகமான பதில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் சாட்சியத்தில் குறித்த தாய் தெரிவித்தார். இதன்போது ஆணைக்குழுவின் அதிகாரி குறித்த தாயின் கூற்றுக்களைப் பதிவு செய்துகொண்டதன் பின்னர் மகன் தொடர்பான தேடுதல்களை மேற்கொள்ள உங்களுடைய பதிவுகள் முக்கியமானது என குறிப்பிட்டார்.
சடலங்களுக்குள்ளும் எனது மகன் இல்லை நெடுந்தீவுப் பகுதியைச் சேர்ந்த விக்டர் ஜேசுதாஸன் மோட்ஷா இன்பம் என்ற தாயார் சாட்சியமளிக்கையில்..
இறுதி யுத்தத்தின் போது மக்கள் நிறைந்திருந்த பகுதிகளினை இலக்கு வைத்து இராணுவத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான கிபிர் குண்டுத் தாக்குதலில் 500 ற்கும் மேலான பொது மக்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்நிலையில் என்னோடு ஒன்றாக நின்ற எனது மகன் காணாமல்போயிருந்தார். அவர் எங்கே என தோடியபோதும் காணவில்லை. இந்நிலையில் சிதறிக்கிடந்த சடலங்களையும் தேடிப்பார்த்ததேன். அங்கு மகன் கிடைக்கவில்லை. எனவே எனது மகன் பிடித்துச் செல்லப்பட்டுள்ளார் என்பதையே ஊகித்துக்கொண்டேன்.
இறுதி யுத்தத்தின் போது சரமாரியாக மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதல், மற்றும் துப்பாக்கி பிரயோகங்களினால் நாளுக்கு நாள் இடம்பெயர்ந்து சென்று கொண்டே இருந்தோம்.
இவ்வாறு இடம்பெயர்ந்து செல்லும் போது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சென்று வெட்ட வெளிகளுக்குள் தரப்பாள்களை கட்டுவிட்டு தங்கியிருந்தோம்.
இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 22 ஆம் திகதி புதுமாத்தளன் பகுதியில் நாங்கள் தரப்பாள் கொட்டிலில் இருந்த போது இராணுவத்தின் கிபிர் தாக்குதல் எங்கள் மீது மேற்கொள்ளப்பட்டது.
இதனால் தரப்பாள் கொட்டில்களில் இருந்த நாங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வெளியில் ஓடிச் சென்றோம். நீண்ட நேரமாக தொடர்ந்த குண்டுத்தாக்குதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போது எங்களின் குடும்பத்தின் அங்கத்தவர்களை தேட ஆரம்பித்தோம். ஏராளமான மக்கள் மத்தியிலும், நூற்றுக்கணக்கான பிணங்களுக்கு மத்தியிலும் காணமல் போன எனது மகனான உசாந்தனை தேடி அலைந்தேன். இங்கு விதைக்கப்பட்டிருந்த பிணங்களுக்குள் எனது மகனை தேடுவதற்குள் அடுத்த கட்ட கிபிர் தாக்குதல் மீண்டும் மக்கள் இருந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
அத்தாக்குதலிலும் பலர் கொல்லப்பட்டார்கள். இறுதியாக மாலை வரைக்கும் கிபிர் தாக்கதல் மேற்கொள்ளப்பட்டிருந்து. அன்றைய தாக்குதலில் உடல்கள் சிதறி உயிரிழந்து கிடந்த ஒவ்வொரு சடலமாக புரட்டிப் பார்த்தேன் அதில் என்னுடைய மகள் இல்லை. எனவே என்னுடைய மகன் பிடித்து செல்லப்பட்டிருக்கலாம் அல்லது செல்தாக்குதலுக்குப் பயந்து எங்காவது சென்றிருக்கலாம் என்ற நிலையில் குண்டுத்தாக்குதலுக்கு மத்தியிலும் 15 நாட்கள்வரை எனது மகனைத் தேடித்திரிந்தேன். எனினும் அவர் மீண்டுவரவில்லை என அவர் சாட்சியமளித்திருந்தார்.