Designed by Iniyas LTD
100 திருக்குறளை எழுதி கோர்ட்டில் சமர்ப்பிக்க உத்தரவு!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலிடெக்னிக் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இருதரப்பையும் சேர்ந்த 10 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களில், 2 மாணவர்களுக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டது. ஒரு மாணவர் மட்டும் மேலூரில் உள்ள இளைஞர்களுக்கான சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த மாணவர் ஜாமீன் கேட்டு, உசிலம்பட்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை நீதிபதி விவேகானந்தன் விசாரித்தார். முடிவில், மாணவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும், அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதை அந்த மாணவருக்கு உணர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் திருக்குறளில் உள்ள ஒழுக்கமுடைமை உள்ளிட்ட 10 அதிகாரங்களை நன்கு படித்து ஒவ்வொரு அதிகாரத்திலும் உள்ள திருக்குறளை தெளிவுரையுடன் தனது கைப்பட எழுதி அதை அடுத்த மாதம்(மார்ச்) 3-ந் தேதி கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
இந்த புதுமையான உத்தரவின் மூலம் சம்பந்தப்பட்ட அந்த மாணவர், 100 திருக்குறளையும், அதன் விளக்கத்தையும் எழுதிக் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.