Designed by Iniyas LTD
16 ஆண்டு கால உண்ணாவிரதத்தை இன்று கைவிடுகிறார் இரோம் ஷர்மிளா
ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்ட மணிப்பூர் மாநில “இரும்புப் பெண்’ இரோம் சானு ஷர்மிளா (44) இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளவுள்ளார்.
மணிப்பூர் உள்ளிட்ட 7 வடகிழக்கு மாநிலங்களில் அண்டை மாநிலத்தவர் அத்துமீறி நுழைவதைத் தடுக்கும் வகையில் கடந்த 1958-ஆம் ஆண்டு ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதன் மூலம் இந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர்.
மேலும் இந்தச் சட்டத்தின் மூலம் சந்தேகத்தின்பேரில் யாரையும் சுட்டுக் கொல்லும் அதிகாரத்தையும் பாதுகாப்புப் படையினர் பெற்றனர்.
இந்நிலையில், கடந்த 2000-ஆம் ஆண்டு அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர், இம்பால் அருகே உள்ள கிராமத்தில் சந்தேகத்தின்பேரில் 10 அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றனர்.
இதைக் கண்டித்தும், அப்பாவிகள் உயிரிழப்பதற்கு காரணமான ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இந்நிலையில், உணவு அருந்தாமல் தற்கொலைக்கு முயல்வதாக ஐரோம் ஷர்மிளாவை மணிப்பூர் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக குழாய் மூலம் வலுக்கட்டாயமாக திரவ உணவு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 16 ஆண்டு கால உண்ணாவிரதத்தை ஆகஸ்ட் 9-ஆம் தேதி கைவிட முடிவு செய்துள்ளதாகவும், ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்வதற்காக மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கடந்த மாதம் 26-ம் தேதி ஐரோம் அறிவித்தார்.
இதையடுத்து இம்பாலில் உள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஐரோம் ஷர்மிளா இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆஜர்படுத்தப்படவுள்ளார். அங்கு உண்ணாவிரதத்தை அவர் கைவிடுவதாக அறிவித்தவுடன் அவர் விடுவிக்கப்படுவார்.
அதன்பின்பு, அவர் எங்குச் செல்லவுள்ளார் என்று தெரியவில்லை.