Designed by Iniyas LTD
20 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் : சிபிஐ விசாரணைக்கு தேவையில்லை -ஆந்திர அரசு பதில்
சேஷாசலம் வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கோரியுள்ளது.
ஆந்திர மக்கள் உரிமைக் கழகம் தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு பதிலளித்து ஆந்திர மாநில உள்துறை முதன்மைச் செயலாளர் தாக்கல் செய்துள்ள மனுவில், பொதுநல மனு அவசர அவசரமாக, உண்மைகளை சரிபார்க்காமல் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி செம்மரக்கடத்தல் தடுப்புப் படையினர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது செம்மரக் கடத்தலில் ஈடுபட்டிருந்தவர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதனால் முதலில் வானத்தை நோக்கி சுட்டதாகவும், அது பலனளிக்காததால் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும் ஆந்திர அரசின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பில் பணியாற்றிய காவல்துறை ஐஜி ரவி சங்கர் அய்யனார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழுவிற்கு ஆந்திர உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த அனுமதியளித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெறுவதால் சிபிஐ விசாரணைக்கு தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்கள் தனியிடத்தில் வைத்து கொல்லப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள ஆந்திர அரசு, மனுதாரர் விளம்பரம் பெறும் நோக்குடன் வழக்கை தாக்கல் செய்திருப்பதாகவும் கூறியுள்ளது.
மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்பட்டுள்ள புகாரையும் பிரேத பரிசோதனை அறிக்கையை திருத்தி எழுதவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ள புகாரும் ஆதாரம் அற்றவை என்ற ஆந்திர அரசு மறுத்துள்ளது. பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதில் உச்சநீதிமன்றத்தின் அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ரவி சங்கர் அய்யனாருக்கு எதிராக மனுதாரர் முன்வைத்த புகார்களையும் ஆந்திர அரசு மறுத்துள்ளது.