தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நாம் ஒருபோதும் ஏற்கமுடியாது – கூட்டமைப்பு

சிறுபான்மை தேசிய இனங்களைப் பாதிக்கும் வகையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள தேர்தல்முறை மாற்ற யோசனையினை உள்ளடக்கிய 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் செயலாளர்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று இலங்கை தமிழரசுக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், டெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், ஹென்றி மகேந்திரன், புளட் சார்பில் த. சித்தார்த்தன், ஆர்.ராகவன் ஆகியோர் பங்கேற்றனர்.tna

இச்சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன் பிரகாரம் தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 இலிருந்து 237 ஆக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தொகுதி வாரி அடிப்படையில் 145 உறுப்பினர்களும் மாவட்ட விகிதாசாரத்தில் 55 உறுப்பினர்களும் தேசிய விகிதாசாரத்தில் 37 உறுப்பினர்களுமாக உள்வாங்கப்பட்டுள்ளது.

இம்முன்மொழிவானது சிறுபான்மை இன தேசிய கட்சிகளையும் சிறு அரசியல் கட்சிகளையும் முற்றுமுழுதாகத் திருப்திப்படுத்தாது பாதிப்பை ஏற்படுத்துவதாகவே காணப்படுகின்றது. இதனை நாம் ஒருபோதும் ஏற்கமுடியாது. அவ்வாறான முன்மொழிவுகளை நாம் முற்றாக எதிர்க்கின்றோம்.சிறுபான்மை இன தேசிய கட்சிகளையும் சிறு அரசியல் கட்சிகளையும் பாதிக்கும் வகையிலான புதிய தேர்தல் முன்வரைவுகளுக்கு கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவை வழங்காது. என்றார்.

Comments
Loading...